முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி., உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி ஜன. 5-ம் தேதி அறிவிக்க வாய்ப்பு

சனிக்கிழமை, 25 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை  ஜனவரி 5-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதை அடுத்து, வரும் 2022-ம் ஆண்டு இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது.  இதில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட்,மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.

தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராக உள்ள நிலையில், தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக தற்போது உள்ளது. இந்நிலையில், தேர்தல் தேதியை வரும் ஜனவரி 5-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையே, ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதை கருத்திற்கொண்டு, உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை ஓரிரு மாதங்கள் தள்ளிவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசையும், தேர்தல் கமிஷனையும் அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த வியாழக் கிழமை கேட்டுக்கொண்டது. இதனால், 5 மாநில சட்டசபை தேர்தல்களும் தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தநிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் சுசில் சந்திரா நேற்று முன்தினம் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்றார். சட்டசபை தேர்தல் ஆயத்த பணிகளை ஆய்வு செய்தார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், 

உத்தரபிரதேசத்துக்கு அடுத்த வாரம் செல்கிறேன். அங்குள்ள நிலவரத்தை ஆய்வு செய்வேன். சூழ்நிலைக்கேற்ப இது குறித்து உரிய முடிவு எடுக்கப்படும். உத்தரகாண்ட் மாநிலத்தை பொறுத்தவரை ஒரே ஒருவருக்கு மட்டுமே ஒமைக்ரான் வந்துள்ளது. 18 வயதை தாண்டிய 100 சதவீதம் பேரும் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். அதனால் நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கிறது. இருப்பினும், அரசியல் சட்ட நிலைப்பாட்டின்படி, கொரோனாவில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளர்கள் எண்ணிக்கை 1,500-ல் இருந்து 1,200 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக 623 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவை ஊக்குவிப்பதற்காக, 100 வாக்குச்சாவடிகளில் பெண் ஊழியர்கள் மட்டுமே பணியில் இருப்பார்கள். 5 வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். எல்லா வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும்.

80 வயதை தாண்டிய வாக்காளர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதி முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க ஒரு மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகளை பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து