முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும் : தமிழக அரசுக்கு இ.பி.எஸ். கோரிக்கை

சனிக்கிழமை, 25 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் நிதியினை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் நிவாரணமாக ரூ.50,000/ வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.  இந்த நிதியை வழங்குவதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசு ஒதுக்கும் நிதியோடு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒரு பங்கையும் சேர்த்து கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2020 ஏப்ரல் முதல் நேற்று முன்தினம் வரை சுமார் 36,700 பேர் இறந்துள்ளதாக தற்போதைய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று இறந்தவர்கள் அனைவரையும் கொரோனா நோய்த் தொற்றினால்தான் இறந்ததாகக் கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, மேலும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 

இது சம்பந்தமான வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொரோனா நிவாரண நிதியை மாநில அரசுகள் வழங்காதது குறித்து நீதியரசர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும், நிவாரண நிதியினை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இனியும் கால தாமதம் செய்தால், இறந்தவர்களின் குடும்பத்தினர் வீதியில் இறங்கி போராடுகின்ற சூழ்நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து