முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜன. 1-ல் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 28 டிசம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

சாமானிய பக்தர்களுக்காக ஜனவரி 1-ம் தேதி மற்றும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. வி.ஐ.பி.க்கள் நேரடியாக வந்தால் மட்டுமே சுவாமி தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

ஆங்கில புத்தாண்டான ஜனவரி மாதம் 1-ம் தேதி, திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நேற்று காலை 9 மணிக்கு இணைய தளம் மூலம் 1,000 பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.  ஒரு டிக்கெட் விலை ரூ. 500. இதன் மூலம் சுவாமியை லகு தரிசனம் (சற்று தொலைவிலிருந்து) முறையில் பக்தர்கள் தரிசிக்கலாம். வரும் 13-ம் தேதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி அன்று முதல் 22-ம் தேதி வரை சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. இதில் வைகுண்ட ஏகாதசியன்று சுவாமி தரிசனம் செய்ய ரூ. 300 தரிசன டிக்கெட்டுகள் ஆயிரமும், மற்றும் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 2,000 டிக்கெட்டுகள் (ரூ. 300) வீதம் இணைய தளத்தில் டிக்கெட்டுகள் நேற்று வெளியிடப்பட்டன. 

ஜனவரி மாதத்தில் இலவச தரிசனம் (தர்ம தரிசனம்) செய்ய நேற்று முன்தினம் தேவஸ்தானம் இணைய தளம் மூலம் 31 நாட்களுக்கு 2.60 லட்சம் டிக்கெட்டுகளை வெளியிட்டது. இந்த டிக்கெட்டுகள் வெளியான 16 நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளையும் பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டனர்.

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சாமானிய பக்தர்களுக்காக ஜனவரி மாதத்தில் தேவஸ்தானம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி, ஜனவரி 1-ம் தேதி மற்றும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. வி.ஐ.பி.க்கள் நேரடியாக வந்தால் மட்டுமே சுவாமி தரிசன ஏற்பாடுகள் செய்யப்படும். திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு வரும் ஜனவரி மாதம் 11-ம் தேதி முதல், 14-ம் தேதி வரை செய்யப்படாது. நேரில் வரும் சாமானிய பக்தர்களுக்கு உடனடியாக அறைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இலவச உணவு வழங்கப்படும். மருத்துவ வசதி, போக்குவரத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். 18 வயதுக்குட்பட்டோர் தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்பதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் அவசியம். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து