முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2021-ம் ஆண்டு - ஒரு ப்ளாஷ் பேக்

வெள்ளிக்கிழமை, 31 டிசம்பர் 2021      உலகம்
Image Unavailable

2022-ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இந்த ஆண்டு அனைவருக்கும் ஒரு இனிய ஆண்டாக அமையட்டும். கடந்த 2021-ல் நடந்த பல்வேறு நிகழ்வுகளை இங்கே பார்ப்போம்.

ஜனவரி

2021 இல் புத்தாண்டிலேயே இந்தியாவுக்கு நல்ல ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஐநா சபையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா 2 ஆண்டுகளுக்கு தேர்வானது. அதே போல கொரோனா தொற்றுக்கு கோவாக்ஷின் மற்றும் கோவிஷீல்டுக்கு அனுமதி கிடைத்தது. இதை தொடர்ந்து ஜனவரி 16 ஆம் தேதி முதல் கட்டமாக 1.91 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஆனால் அதற்கு பிறகுதான் நாட்டில் மிகப் பெரிய திருப்பம் ஏற்பட்டது. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை விலக்கிக் கொள்ள வலியுறுத்தி போராடிய விவசாயிகளின் டிராக்டர் பேரணி தடுப்புகளை உடைத்துக் கொண்டு டெல்லி செங்கோட்டைக்குள் புகுந்தது. குடியரசு தினத்தன்று நடந்த இந்த வன்முறை சம்பவத்தில் செங்கோட்டையில் தேசிய கொடிக்கு அருகிலேயே தங்களது கொடி மற்றும் பேனர்களை விவசாயிகள் ஏற்றினர். 5 ஆம் தேதி எழுத்தாளர் ஆ. மாதவன் தனது 87-வது வயதில் திருவனந்தபுரத்தில் காலமானார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன்,  தமது 88வது வயதில் மூப்பு காரணமாக மறைந்தார்.

பிப்ரவரி

பிப்ரவரி 7 இல் உத்தரகாண்ட் பனிப்பாறை வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். அம்மாத 22 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பில் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு தோல்வியை தழுவியது. இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலானது. அதே நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில தேர்தல்களை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மார்ச்

உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் விலகி கொள்ள, புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றுக் கொண்டார்.

ஏப்ரல்

இந்தாண்டுக்கான திரைப்படை துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு 1 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதே வேளையில் கொரோனா பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியிருந்தது. 6 ஆம் தேதி கேரளா, தமிழகம், புதுச்சேரியில் வாக்கு பதிவு ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களில் பல கட்ட வாக்கு பதிவுகள் நடைபெற்றன. 7 ஆம் தேதி எதிர்பாராத திருப்பமாக மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே சட்டீஸ்கரில் நடந்த மோதலில் 22 வீரர்கள், 9 மாவோயிஸ்ட்கள் பலியாகினர். 10 ஆம் தேதி மேற்கு வங்க தேர்தல் வன்முறையில் 4 பேர் பலியாகினர். 12 ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஓய்வு பெற்றார். இதையடுத்து சுசீல் சந்திரா தலைமை தேர்தல் ஆணையராக மறுநாள் பதவியேற்றுக் கொண்டார். 20 ஆம் தேதி கொரோனா 2 ஆம் அலை பரவலை தடுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதே நாளில் இந்திய தலைமை நீதிபதி பாப்டே ஓய்வு பெற்றார். மறுதினம் புதிய தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா பொறுப்பேற்றார். 17 ஆம் தேதி பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மரணமடைந்தார். அதே போல பிரபல இயக்குநர் கே வி ஆனந்த் மாரடைப்பால் காலமானார். அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் கே.வி. ஆனந்த். 54 வயதான கே.வி. ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பெரியாரிய - மார்க்சிய ஆய்வாளருமான வே. ஆனைமுத்து புதுச்சேரியில் தமது 96வது வயதில் காலமானார்.

மே 

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2 ஆம் தேதி வெளியாகின. அதில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சிகள் 3 மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டன. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியும், அசாமில் பாஜகவும், கேரளத்தில் இடதுசாரி கூட்டணி கட்சிகளும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டன. தமிழகத்தில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மையாக வென்றது. 9 ஆம் தேதி மு.க. ஸ்டாலின் முதல்வரானார். புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, பாஜக மற்றும் ரங்கசாமி தலைமையிலான அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ் வென்றது. ரங்கசாமி முதல்வரானார். அசாம் முதல்வராக ஹிமாந்த பிஸ்வாஸ் முதல்வரானார்.

2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தொடங்கியது. எனினும் மே மாதத்தின் தொடக்கத்தில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மே 4ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. 4 ஆம் தேதி  சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முதுமை காரணமாக தமது 87வது வயதில் காலமானார். 30 ஆம் தேதி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவிகளில் ஒருவரான மைதிலி சிவராமன் தமது 81-வது வயதில் மறைந்தார்.

ஜூன்

18 ஆம் தேதி  முன்னாள் ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் 91 ஆவது வயதில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சண்டிகரில் மறைந்தார்.

ஜூலை

4 ஆம் தேதி உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி புதிய முதல்வரானார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு தமிழகத்தை சேர்ந்த எல், முருகன் தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சராக பதவியேற்றார். மறுநாள் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 24 ஆம் தேதி டோக்கியோ ஒலிம்பிக்கில் சைக்கோம் மீராபாய் சானு பளூ தூக்குதலில் வெள்ளி பதக்கம் வென்றார். 28 இல் பசவராஜ் பொம்மை கர்நாடக முதல்வராக பதவியேற்றார். 7 ஆம் தேதி பிரபல பாலிவுட் திரைப்பட நடிகர் திலிப் குமார் தமது 98-வது வயதில் மறைந்தார்.

ஆகஸ்ட்

டோக்கியோ ஒலிம்பிக்கில்  பி வி சிந்து, லவ்லினா போர்கோஹெய்ன், வெண்கலம் வென்றனர். ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றது. பளு தூக்கும் போட்டியில் ரவி குமார் தாகியா வெள்ளி பதக்கம் வென்றார். நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். பஜ்ரங் புனியா பளூ தூக்கும் போட்டியில் வெண்கலம் வென்றார். 22 ஆம் தேதி தமிழகத்தை சேர்ந்த இல. கணேசன் மணிப்பூர் ஆளுநராக தேர்வு செய்யப்பட்டார். .

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பவினா படேல் டேபிள் டென்னிஸில் வெள்ளி, நிசாத் குமார் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

அவனி கெலரா துப்பாக்கி சுடுதலில் தங்கம், யோகேஷ் குமார் துனியா வட்டு எறிதலில் வெள்ளி, தேவேந்திர ஜஜாரியா ஈட்டி எறிதலில் வெள்ளி, சுமித் ஆண்டில் தங்கமும் வென்றனர்.  இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதலில் வெள்ளியும், சரத் குமார் வெண்கலமும் வென்றனர். சிங் ராஜ் அதானே துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார். 

5 ஆம் தேதி அதிமுக அவைத்தலைவர் இ. மதுசூதனன் உடல்நலக் குறைவால் 81 ஆவது வயதில் சென்னையில் மறைந்தார். 13 ஆம் தேதி மதுரை  ஆதினத்தின் 292-வது மடாதியாக இருந்த அருணகிரிநாதர் முக்தி அடைந்தார். 23 ஆம் தேதி மதுரை ஆதின மடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரியார் பொறுப்பேற்றார் 21 ஆம் தேதி  உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான கல்யாண் சிங் தமது 89-வது அகவையில் மறைந்தார்.

செப்டம்பர்

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் அவனி லெகரா துப்பாக்கி சுடுதலில் வெண்கலம், பிரவீண் குமார் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்றனர். அரவிந்தர் சிங் வில் வித்தையில் வெண்கலம்,  மணீஸ்நர்வால் துப்பாக்கி சுடுதலில் தங்கம், அதே பிரிவில் சிங்ராஜ் அதானே வெள்ளியும் வென்றனர். பிரமோத் பகத் இறகு பந்தாட்டத்தில் தங்கம், மற்றொரு பிரிவில் கிருஷ்ண நாகர் தங்கம் வென்றனர்.

குஜராத் புதிய முதல்வராக புபேந்திர படேல் பதவியேற்றார். ஆர்.என். ரவி தமிழக ஆளுநராக 18 ஆம் தேதி பதவியேற்றார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பதவி விலகியதைத் தொடர்ந்து சரண்ஜித் சிங் சன்னி முதல்வரானார். 8 ஆம் தேதி  தமிழ்த் திரைப்படக் கவிஞர் புலமைப்பித்தன் உ்டல்நலக் குறைவு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமது 80-வது  வயதில் காலமானார்.

அக்டோபர்

68 ஆண்டு களுக்கு பிறகு ஏர் இந்தியாவை மீண்டும் டாடா நிறுவனம் கைப்பற்றியது. 21 ஆம் தேதி 100 கோடி இந்தியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை எட்டப்பட்டது. தாதா சாகேப் பால்கே விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. 30 ஆம் தேதி போப்பாண்டவரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார். 8 ஆம் தேதி கவிஞர் பிறை சூடன், 12 ஆம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் மறைந்தனர். 28 ஆம் தேதி சிபிஎம் மூத்த தலைவர் நன்மாறன் தனது 74 ஆவது வயதில் காலமானார்.

நவம்பர்

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் ஆதி சங்கரர் சிலை திறந்து வைக்கப்பட்டது. டெல்லி உள்ளிட்ட 3 மாநிலங்களை ஸ்தம்பிக்க செய்த, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.  24 ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 

டிசம்பர்

தேர்தல் திருத்த சட்ட மசோதா இரு அவைகளிலும்  நிறைவேறியது. பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்த்தி மக்களவையில் சட்ட வரைவு அறிவிக்கப்பட்டது. தொல்காப்பியம் இந்தி  மொழி பெயர்ப்பு, பதிணெண் கீழ் கணக்கு கன்னட மொழிபெயர்ப்பு ஆகியவை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் புது  டெல்லியில் வெளியிடப்பட்டது.

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தமிழகத்தில உள்ள உதகமண்டலத்தில் 8 ஆம் தேதி குன்னூர் அருகே நடந்த கோர ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவருடன் அவரது மனைவி மதுலிகா மற்றும் 11 சக ராணுவ உயரதிகாரிகள் அதில் பலியாயினர். 10 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்று வந்த போராட்டத்தை விவசாயிகள் திரும்ப பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து