முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டில் குடும்ப உறுப்பினர்களின் வயது உச்சவரம்பு நீக்கம்: தமிழக அரசாணை வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டில் குடும்ப உறுப்பினர்களின் வயது உச்சவரம்பு நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதல்வரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அரசு ஊழியரின் பிள்ளைகளுக்கான அதிக பட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் அவர்களை சார்ந்து வாழும் மகன், மகள் ஆகியோருக்கான வயது உச்ச வரம்பை நீக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின், ‘‘அரசு பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை சார்ந்து வாழும் மகன்கள், மகள்கள் ஆகியோரை அவர்கள் வயது வரம்பினை கருத்தில் கொள்ளாமல் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.

கடந்தாண்டு ஜூன்மாதம் வெளியிடப்பட்ட அரசாணையில், அரசு ஊழியர், அவரது வாழ்க்கைத் துணை, 25 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் ஆகியோருக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம், குறிப்பிட்ட நோய்களுக்கு ரூ.10 லட்சம் வரை மருத்துவக்காப்பீடு வழங்கும் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதில், இதற்காக அரசு ஊழியரிடம் பிரீமியம் தொகை ரூ.300 பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இத்திட்டம் கடந்தாண்டு ஜூலை முதல் வரும் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை அமலில் உள்ளது. இந்நிலையில், முதல்வரின் சட்டப்பேரவை அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், அரசு ஊழியரின் பிள்ளைகளுக்கான அதிக பட்ச வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. 

அதே நேரம், காப்பீடு வழங்கும் யுனைட்டட் இந்தியா நிறுவனத்தின் பரிந்துரைப்படி, வேலைக்கு செல்லாதவராகவும், உயர்கல்வி படிப்பவர்களாகவும். மன நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளாகவும் இருக்கலாம். திருமணமாகாதவர் அல்லது சட்டப்படி விவாகரத்து பெற்று அரசு ஊழியரை சார்ந்த பெண் பிள்ளையாக இருக்க வேண்டும்.

 

இவ்வாறான தகுதி உடையவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான பிரீமியம் தொகையாக கூடுதலாக அந்த அரசு ஊழியர் ஜி.எஸ்.டி.யுடன் ரூ.20 செலுத்த வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்த தற்போது ரூ.1 கோடியே 9 லட்சத்து 74 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து