முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா தலைமையில் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மதுரை டி.எம். கோர்ட் அருகே நேற்று நகர் மாவட்டச் செயலாளரும், மேற்கு சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் கே. ராஜூ, புற நகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான வி. வி ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரை மாநகர், புறநகர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேசியதாவது ;. 

மதுரை மாநகரில் யானைக்கல், சிம்மக்கல், அண்ணாநகர் சுந்தரம் பார்க் சாலை, மாட்டுத்தாவணி, தல்லாகுளம் விஷால் டி மால் சாலை, பழங்காநத்தம் சாலை, கோ.புதூர், அண்ணாநகர் மற்றும் 100 வார்டுகளில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து மழை காலங்களில் மழைநீர் செல்லமுடியாமல் சாலையிலேயே மழை நீர் தேங்கி நிர்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இரண்டு சக்கர வாகனங்கள் கூட போக முடியாத நிலையில் மதுரையின் சாலைகள் அமைந்துள்ளன. பள்ளிகளும் திறந்ததால் சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் பள்ளிக் கல்லூரிக்கு செல்வதிலும் மிகவும் கஷ்டப்பட்டு சென்று வருகின்றனர். 

மதுரை மாநகராட்சி நிர்வாகம் கடந்த எட்டு மாத காலத்தில் எந்த பணியையும் செய்யவில்லை. முக்கிய சாலைகளில் முக்கிய தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தெருக்களில் சாக்கடை ஆறாக ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு கொரொனா தொற்று புதிய வகை நோய் பரவுகின்ற இந்த சூழ்நிலையில் மதுரையில் சுகாதாரப் பணி கேள்விக்குறியாகியுள்ளது.? மாநகராட்சி பணியாளர்கள் பற்றாக்குறையால் தவிக்கிறது. தெருவிளக்குகள் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது. 20 லட்சம் மக்கள் வாழ்கின்ற மதுரையில் எந்த ஒரு அடிப்படை பணிகள் நிறைவேற்றாத மாநகராட்சி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு காலத்தில் கொண்டு வந்த சாலை ஒப்பந்தங்கள் ரத்து செய்தது. புதிய ஒப்பந்தங்கள் போடாத தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க ஆட்சி தொடங்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மதுரை நகருக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டமான முல்லை பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் 1250 கோடி ரூபாய் செலவில் குடிநீர் கொண்டு வரும் திட்டம் தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மதுரை நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு நடைபெற்ற பெரியார் பஸ் நிலைய பணிகள் உள்ளிட்ட சிலவற்றை தி.மு.க. வினர் தற்போது திறந்து வைத்து வருகிறார்கள். மதுரைக்கு இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எந்த நிதியையும் மாநகராட்சிக்கு பெற்றுத்தர முடியவில்லை. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விரைவு சாலைகள், வைகை நதிக்கரையோரம் இருபுறமும் சாலைகள் அமைக்கப்பட்டு மக்கள் தற்போது போக்குவரத்து சிரமமின்றி சென்று வருகிறார்கள். இதுபோன்ற எந்த பணியையும் தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மதுரை நகரில் நடைபெறவில்லை. இனிமேலும் தாமதித்தால் மேலும் கண்டன போராட்டங்களை நடத்த அ.தி.மு.க. தயங்காது. இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.  ராஜூ பேசினார் . 

இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது, 

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளது. இதில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் 29 மாநகராட்சி வார்டுகள் உள்ளது. கடந்த 7 மாதங்களாக தெருக்களில் உள்ள சாலைகள் , பிரதான சாலைகள் எல்லாம் கடுமையாக சேதமடைந்துள்ளது அதுமட்டுமல்லாது தெருக்களில் சாக்கடை ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவ மழையால் சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. துப்பரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் சாலைகளில் எங்கும் குப்பைகள் சிதறிக் கிடக்கிறது. இதன் மூலம் பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த பத்தாண்டுகளில் அம்மாவின் ஆட்சியில் மதுரையின் வளர்ச்சிக்காக பல்வேறு சிறப்பு நிதி வழங்கப்பட்டன. குறிப்பாக நான் மேயராக இருந்த காலத்தில் 250 கோடியை சிறப்பு நிதியாக அம்மா வழங்கினார். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மதுரை மாநகராட்சிக்கு சாலைகள் குடிநீர் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. மதுரை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாத நிலையில் முன்னாள் முதல்வர் பெயரில் நூலகம் அமைக்க 150 கோடி நிதியை தி.மு.க. அரசு ஒதுக்கி உள்ளது. இதனை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த ஆண்டு இந்த நிதியை மதுரை மாநகராட்சிக்கு ஒதுக்கி பல்வேறு பணிகளை நடத்த ஆவண செய்ய வேண்டும். அடுத்த ஆண்டு இந்த நூலகத்திற்கான பணியை இந்த அரசு துவக்கலாம். தற்போது மக்களுக்கு தேவையான முக்கிய பிரச்சினைகளை மாநகராட்சி தீர்த்து வைப்பதற்கு ஏதுவாக தமிழக அரசு உடனடியாக நிதியினை ஒதுக்கி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.கோபாலகிருஷ்ணன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழரசன், மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் வில்லாபுரம் ஜெ. ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் சண்முகபிரியா கோஸ்மின், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், முன்னாள் மேயர் திரவியம், பரவை ராஜா, பகுதி கழக செயலாளர்கள் அண்ணா நகர் முருகன், பைக்காரா கருப்புசாமி, கே.ஜெயவேல், கே.வி.கே.கண்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் புதூர் அபுதாகீர், கண்ணகி பாஸ்கரன், சண்முகவள்ளி, கள்ளந்திரி சேகர், அண்ணாநகர் முத்துச்சாமி, இளைஞரணி செயலாளர் சோலை ராஜா, பேச்சாளர்கள் கிருபாகரன், பாவலர் ராமசந்திரன், மகளிரணி பாண்டியம்மாள், பேச்சியம்மாள், புதூர் பாப்பா, எம்.கல்யாணி, பி.புஷ்பா, லலிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து