முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

புதன்கிழமை, 5 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, பொங்கல் பரிசுத் தொகை வழங்காதது, அம்மா மினி க்ளினிக்குகள் மூடல் உள்ளிட்ட காரணங்களைக் கண்டித்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் கூட்டம் என்பதால் கவர்னர் தனது உரையைத் தொடங்கியவுடனேயே அவையில் ஒருபுறம் கூச்சலும், குழப்பமும் எழுந்தது. கவர்னருக்கு எதிராக விடுதலை சிறுத்தைக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோஷங்களை எழுப்பினர். நீட் விலக்கு மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதே வேளையில், அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியது உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னர் உரையைப் புறக்கணித்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.

அதை தொடர்ந்து சட்டசபைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது, 

தமிழகத்தில் கடந்த 8 மாத தி.மு.க.  ஆட்சி காலத்தில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது.  பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் தமிழகத்தில் உருவாகி வருகிறது. தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்துவதில்லை. 

தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை அதிகமாக உள்ளது.  இதனால் இளைஞர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதை, கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம், கட்டப்பஞ்சாயத்து மீண்டும் தலைவிரித்தாடுகிறது. 

வடகிழக்குப் பருவமழையின்போது, சென்னையில் பெய்த மழையால், சென்னை மாநகரத்தில், பெரும்பாலான வீதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் வேதனைக்குள்ளானார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள்  கிடைக்கவில்லை, ஆனால் முதல்வர் ஸ்டாலின், முந்தைய அ.தி.மு.க. அரசுதான் காரணம் என்று ஒரு தவறான பொய்யான பிரச்சாரத்தை செய்கிறார். 

2015 பெருமழையின் போது அ.தி.மு.க. அரசு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5000 நிவாரணத் தொகை வழங்கியது.  ஆனால் திமுக அரசு  எவ்வித நிவாரணத் தொகையும் வழங்கவில்லை. கடந்த தைப்பொங்கலில் மக்கள் சிறப்பாக பொங்கல் கொண்டாட ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கியது தற்போதைய தி.மு.க. அரசு பொங்கல் பரிசு வழங்கவில்லை. இது மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கின்றது. டெல்டா பகுதி மக்களுக்கும் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. 

அதேபோல ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் 1900 அம்மா மினி கிளினிக்குகள் நாங்கள் தொடங்கினோம். அதை தற்போது தி.மு.க. அரசு மூடியுள்ளது. மேலும் விசாரணை என்ற பெயரில் சட்டத்தை மீறி அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது தொடர்ந்து பொய்வழக்கு போடுவது கண்டிக்கத்தது. இதனால் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து