முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிதாக 10.17 லட்சம் பேர் பெயர் சேர்ப்பு: தமிழகத்தில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் : சோழிங்கநல்லூர் பெரிய தொகுதியாக அறிவிப்பு : இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

புதன்கிழமை, 5 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் 6 கோடியே 36 லட்சத்து 25 ஆயிரத்து 813 வாக்காளர்கள் உள்ளதாகவும், புதிதாக 10.17 லட்சம் வாக்காளர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் சோழிங்கநல்லூர் பெரிய தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் ஜனவரி 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த வாக்காளர்கள் விவரங்களை தமிழக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. 

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

01.01.2022-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2022-ன் இறுதி வாக்காளர் பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. 

அதன்படி 01.01.2022-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 01.11.2021 அன்று வரைவுப் பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் மற்றும் இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் 01.11.2021 -ஆம் தேதியிலிருந்து 30.11.2021 -ஆம் தேதி வரை பெறப்பட்டன.

மேற்கண்ட சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 10,36,917 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 10,17,456 விண்ணப்பங்கள் (ஆண்கள் 4,56,071,  பெண்கள் 5,60,735, மூன்றாம் பாலினத்தவர் 650) ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெயர் நீக்கலுக்காக 2,96,107 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 2,86,174 வாக்காளர்களின் பெயர்கள் இடப்பெயர்ச்சி (80,018), இறப்பு (1,90,470) மற்றும் இரட்டைப் பதிவு (15,686) ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளன.  

பதிவுகளில் திருத்தங்கள் செய்யக்கோரி 1,70,271 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 1,61,461 (ஆண்கள் 83,907,  பெண்கள் 77,479,  மூன்றாம் பாலினத்தவர் 75) ஏற்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்யக்கோரி 1,23,348 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 1,20,338 (ஆண்கள் 56,421,  பெண்கள் 63,899, மூன்றாம் பாலினத்தவர் 18)  ஏற்கப்பட்டு உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 2022-ம் ஆண்டு சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி தமிழகத்தில்  6,36,25,813 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,12,26,759, பெண் வாக்காளர்கள் 3,23,91,250 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,804 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், இறுதி வாக்காளர் பட்டியல்களின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 7,11,755 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,56,239,  பெண்கள் 3,55,394,  மூன்றாம் பாலினத்தவர் 122). இதற்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,76,467 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,37,305,  பெண்கள் 2,39,021, மூன்றாம் பாலினத்தவர் 141).

மாறாக, தமிழகத்திலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது.  இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,78,517 ஆவர். (ஆண்கள் 86,893, பெண்கள் 91,613, மூன்றாம் பாலினத்தவர் 11). இதற்கு அடுத்தபடியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,78,665 ஆவர் (ஆண்கள் 92,978, பெண்கள் 85,626,  மூன்றாம் பாலினத்தவர் 61).

வெளிநாடுவாழ் வாக்காளர்கள் 8 பேரின் பெயர்களும் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம், 2022-ம் காலத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இதுவரை, 4,88,888 மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

2022-ம் ஆண்டு சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தில் 18-19 வயதுள்ள 4,32,600 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். (ஆண்கள் 2,29,338, பெண்கள் 2,03,125, மூன்றாம் பாலினத்தவர் 137).

11.  வாக்காளர் பட்டியல்களை, தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளமான ன http://elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம்.  அதில் தங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

 வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறை தற்போது செயல்பாட்டிலுள்ளது. 01.01.2022 அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால்,  வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து      விண்ணப்பிக்கலாம். 

இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய அறிவுறுத்தலின்படி, ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ஒரு அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல் மற்றும் ஒரு மென் நகல் குறுந்தகடுக்கு பதிலாக, இரண்டு அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியல் நகல்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குமாறு அனைத்து வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  மாவட்ட தொடர்பு மையங்களை “1950" என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  பொதுமக்கள் இம்மையங்களைத் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தகவல்களை அறியலாம். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தில் 180042521950 என்ற  கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் மாநிலத் தொடர்பு மையம் இயங்கி வருகின்றது. இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து