முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பரிசு தொகுப்பில் அனைத்து பொருட்களும் கிடைக்க செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 7 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

பொங்கல் பண்டிகைக்கு முன்பே அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்துப் பொருட்களும் நல்ல முறையில் கிடைக்க செய்ய வேண்டும் என தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2020-ம் ஆண்டு ஆயிரம் ரூபாய் ரொக்கம் உட்பட ரூ. 2,363 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. 2021-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ. 2,500 நிதி உதவி உள்பட ரூ. 5.604 கோடி மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.  அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ. 2,500 நிதியுதவி வழங்கப்பட்டபோது ரூ.5,000 வழங்கப்பட வேண்டும் என்று கூறியது தி.மு.க. 

ஆனால் 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கம் இல்லாமல் வெறும் பொங்கல் தொகுப்பினை மட்டும் 1,159 கோடி ரூபாய் மதிப்பில் துணிப்பை உட்பட 21 பொருட்களை வழங்க தி.மு.க. அரசு ஆணையிட்டுள்ளது. இந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் இந்த மாதம் 4-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

அரசின் இந்த அறிவிப்பிற்கு இணங்க பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான பொருட்கள் வழங்கப்படுகின்றனவா என்று பார்த்தால் அதிலும் பெரும் குளறுபடி நடந்திருப்பதாக பொருட்களை பெற்றுச்செல்லும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமற்று இருப்பதாகவும், எல்லோருக்கும் 21 பொருட்கள் கிடைக்கவில்லை என்றும், பெரும்பாலான பைகளில் 5 முதல் 6 பொருட்கள் குறைவாக இருப்பதாகவும், இருக்கின்ற பொருட்களின் பொட்டலங்கள் திறந்து இருப்பதாகவும், சில பகுதிகளில் துணிப்பை கொடுப்பதில்லை என்றும் பொதுமக்கள் குறை கூறும் காட்சிகள் வலைதளங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

எனவே, அனைத்துப் பொருட்களும் இருக்கிறதா என்பதை உறுதி செய்து நியாய விலைக் கடைகளுக்கு வழங்க வேண்டிய கடமை அரசுக்குத்தான் இருக்கிறது. இதை அரசு செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பே இந்த மாதம் 14-ம் தேதி பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான். இந்த நிலையில், தவிர்க்க இயலாத காரணங்களால் தொகுப்பை பெற இயலாதவர்கள் இந்த மாதம் 31-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்பது எந்த நோக்கத்திற்காக இந்தப் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. 

எனவே, முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்தி, பொங்கல் பண்டிகைக்கு முன்பே அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்துப் பொருட்களும் நல்ல முறையில் கிடைக்கவும், ஏற்கெனவே வாங்கியத் தொகுப்பில் குறைபாடு இருந்தால், அதனைச் சரி செய்யவும் ஆவன செய்திட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து