முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட ஒன்றிணைந்து சட்டப் போராட்டம் நடத்துவோம் : அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்: பா.ஜ.க. வெளிநடப்பு

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட சட்டப் போராட்டத்தை ஒன்றிணைந்து மேற்கொள்வது என தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் தொடக்க உரையாற்றி அனைவரையும் வரவேற்றார். ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் கீழ்க்காணும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம்: 

மருத்துவத் துறையில் தமிழகம் இந்த நாட்டிற்கே முன்னோடியாக விளங்கி வருகின்றது. ஆனால், மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு திருத்தச் சட்டம் மற்றும் அதன் பிறகு கொண்டு வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியன மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முன்நிறுத்தி நமது மாணவர்களை பெருமளவில் பாதித்துள்ளது. மாநில அரசு நிதியிலிருந்து, மாநில அரசுகளால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்கள் எந்த முறையில் சேர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் உரிமையை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறித்து விட்டது. இது மாநில சுயாட்சிக்கு எதிரானது.

இதுமட்டுமின்றி, ஒன்றிய அரசினால் மாநில அரசுகளின் மீது திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வானது, இது போன்ற நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதற்கு வசதி வாய்ப்புகள் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாகவும், மருத்துவர் மாணவர் சேர்க்கையில் 12 ஆண்டுகள் படிக்கக்கூடிய பள்ளிக் கல்வியால் எவ்விதப் பயனும் இல்லை என்ற நிலையை உருவாக்கிப் பள்ளிக்கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக்கும். 

இந்த நீட் தேர்வை மாணவர்களின் கல்விக் கனவை சிதைப்பதாக மட்டுமின்றி, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சி தத்துவத்தை சீரழிப்பதாகவும் அமைந்து விட்டது. ஆகவே மாநில உரிமைகளை நிலைநாட்டிடவும், நம் மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றிடவும் தமிழக சட்டமன்றத்தில் 13.9.2021 அன்று ஒருமனதாக ஒரு சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மாநில கவர்னருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், இந்த சட்ட முன்வடிவினை மாநில கவர்னர், ஜனாதிபதிக்கு  அனுப்பாமல் இருப்பது சட்டப்பேரவையின் இறையாண்மைக்கு ஏற்றதல்ல என்று கருதப்படுகிறது. தமிழக மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்கால நலன் கருதி முதல்வரே நேரில் சென்று கவர்னரைச் சந்தித்து நீட் சட்டமுன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டார். 

மேலும் இது தொடர்பாக, கடந்த 28.12.2021 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திக்கச் சென்ற நேரத்தில், அவரை சந்திக்க இயலவில்லை என்பதால், மனுவினை அவரது அலுவலகத்தில் அளித்து, அன்று மாலையே அம்மனுவும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்து மேலும் வலியுறுத்திட, மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கோரி, பல நாட்கள் ஆகியும் சந்திக்க மறுத்து விட்டதால், அவரிடம் கொடுக்கப்பட வேண்டிய மனுவும் அவரது அலுவலகத்திலேயே கொடுக்கப்பட்டது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் மறுத்தது மக்களாட்சி மாண்புகளுக்கு எதிரானது என்று 6.1.2022 அன்று, தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்து, இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சரிடம் நாம் ஏற்கெனவே அளித்த கோரிக்கையை பரிசீலிக்க அவரிடமிருந்து அழைப்பு வரப்பெற்றால் அனைத்து கட்சிகளின் சார்பில் அவரை சந்திக்கலாம் எனவும்  கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. நாமும் நமது மாநிலமும் தற்போது அடைந்துள்ள இந்த வளர்ச்சியை சமூக நீதிக்கான அரசியல், சட்ட மற்றும் மக்கள் போராட்டங்களின் மூலமே பெற்றுள்ளோம் என்ற அடிப்படையில் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை சிதைத்திடும், மாநில சுயாட்சித் தத்துவத்தை சீர்குலைத்திடும் நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிடத் தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை மூத்த சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்த பின், தமிழக சட்டப்பேரவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து மேற்கொள்வது எனவும், நீட் தேர்வின் பாதகங்களை நாட்டின் மற்ற மாநிலங்களும் உணரும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது என்று அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்றோர்

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் சார்பில், தி.மு.க. சார்பில் க. பொன்முடி, அ.தி.மு.க. சார்பில் சி. விஜய பாஸ்கர், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, பா.ஜ.க. சார்பில் வானதி சீனிவாசன், பா.ம.க. சார்பில் ஜி.கே. மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் வீ.பி. நாகைமாலி, ம.தி.மு.க. சார்பில் சதன் திருமலைக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எம். சிந்தனைச்செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ரா. ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில்  வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முனைவர் ஜவாஹிருல்லா, புரட்சி பாரதம் கட்சி சார்பில் பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாஜக வெளிநடப்பு: 

பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை நல்குவதாகத் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் உரையாற்றிய வானதி சீனிவாசன், தமிழகத்தில்  நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி, அனைத்துக் கட்சிகளின் சார்பில் கொண்டு வரப்பட்டிருக்கும் தீர்மானத்தினை நிறைவேற்றிட உடன்பாடில்லை என்று தங்களது கட்சியின் சார்பில் தெரிவித்து, கூட்டத்திலிருந்து சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து