முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நாளை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

எவரெஸ்ட் சிகரம் போல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாக தெரிவித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  தமிழ்நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள தகுதியுடைய நபர்களுக்கு ஜனவரி 10 தேதி தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இந்த முகாம்கள், முழு ஊரடங்கு காரணமாக சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று (சனிக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதால் குடும்ப தொடர்பு பாதிப்புகள் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. எனவே முதியோர்கள் கட்டாயம் இந்த மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதனிடையே அடையாறு இந்திரா நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மெகா தடுப்பூசி முகாமினை நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், “உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை எவரெஸ்ட் சிகரம் போல் உயர்ந்து கொண்டு இருக்கிறது. உலகளவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக நேற்று முன்தினம் 26.06 லட்சம் பேருக்கு ஒரு நாள் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு நேர பொது முடக்கத்திற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சுணக்கம் இல்லை. ஒவ்வொரு பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார். 35 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த கண்டறியப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள தகுதியுடைய நபர்களுக்கு ஜனவரி 10 தேதி தடுப்பூசி செலுத்தப்படும். 

33 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியிருந்தது. அதில் 21 லட்சம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை முதல் டோஸ் 92 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 71 சதவீதம் பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.  பொது இடங்களுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து