முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு: முழு ஊரடங்கின்போது வெறிச்சோடிய சாலைகள் - மக்கள் வீடுகளில் முடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கின் போது மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. கடைகள் அனைத்து அடைக்கப்பட்டிருந்தன. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. ‘ஒமைக்ரான்’ வைரசும் அச்சுறுத்துகிறது. இந்தநிலையில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுனர்களும் அறிவுறுத்தினர். 

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் முழுமுடக்கம் நேற்று அமல்படுத்தப்பட்டது. இப்படி நீண்ட நாட்களுக்கு பிறகு முழுஊரடங்கு கடைபிடிக்கப்படும் முதல் ஞாயிற்றுக்கிழமையாக நேற்று அமைந்தது. 

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக நேற்று காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை.‘டாஸ்மாக்’ மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இயங்கவில்லை. ஆனால் மின்சார ரெயில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தன.

முழு ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் மக்கள் வீடுகளில் முடங்கினர். சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டவர்கள் மட்டுமே தங்களது வாகனங்களில் பயணம் செய்ததை காண முடிந்தது. ஆஸ்பத்திரிகளில் பணிபுரிபவர்கள், பெட்ரோல் நிலையங்களில் பணியாற்றுபவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் மட்டுமே தங்களது அடையாள அட்டைகளை காட்டி பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதன்காரணமாக தமிழகம் முழுவதும அனைத்து முக்கிய சாலைகளிலும் ஒரு சில மோட்டார் சைக்கிள்கள், கார்கள் ஆகியவை மட்டுமே ஓடின. வாடகை ஆட்டோக்கள் பெரிய அளவில் இயக்கப்படவில்லை.

ரெயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தன. ஆனால் போலீசாரின் வாகன சோதனையின்போது பயணச்சீட்டை காண்பிக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் ஈடுபட்டனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். மேம்பாலங்கள் அடைக்கப்பட்டு, சிக்னல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.  ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து கணிசமாக குறைந்து  காணப்பட்டன. சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பிரதான சாலைகளும் ஆரவாரம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

நேற்று முழு ஊரடங்கின் போது சென்னை உள்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, சேலம் உள்பட அனைத்து இடங்களிலுமே போலீசார் சாலைகளில் சென்றவர்களை தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்கள். அப்போது உரிய அடையாள அட்டையை காட்டியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

தேவையில்லாமல் வெளியில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நகரப்பகுதிகளில் இது போன்று போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டிருந்த நிலையில் புறநகர் பகுதிகளில் பொது இடங்களில் ஒன்றாக கூடியவர்களை கண்காணிக்க போலீசார் டிரோன் கேமராக்களையும் பயன்படுத்தினர். குறிப்பாக குளம் மற்றும் ஏரிக்கரைகள், ஊர்களையொட்டியுள்ள காட்டுப்பகுதிகள் ஆகியவற்றில் தேவையில்லாமல் கூடுபவர்களை டிரோன் கேமரா மூலம் கண்காணித்து விரட்டும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் சார்பில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து