முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்: பிரதமர் மோடி காணொலி மூலம் 12-ம் தேதி தொடங்கி வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்ககப்பட்ட நிலையில், கொரோனா அதிகரிப்பால் காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் 37 உள்ளன. இதில் 5,125 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. மருத்துவ கட்டமைப்பை விரிவுபடுத்தவும், கூடுதலான மருத்துவ மாணவர்களை சேர்க்கவும் வசதியாக புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன. மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்து திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவ கல்லூரி வீதம் 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கான பணிகள் நடைப்பெற்று முடிந்துள்ளது.

அதன்படி, ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 150 மாணவர்கள் வீதம் 1,650 மாணவர்களை சேர்ப்பதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியதோடு அனைத்து கல்லூரிகளையும் மத்திய குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. அந்த ஆய்வின்போது சில குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது. அவற்றையும் தமிழக அரசு சீர் செய்ததை அடுத்து கல்லூரிகளை தொடங்க மருத்துவ கவுன்சில் அனுமதியளித்து உத்தரவிட்டது.

இதையடுத்து வருகிற 12-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி விருதுநகர் மாவட்டத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை நேரடியாக வந்து தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நேரில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு காணொலி காட்சி மூலம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் புதிதாக தொடங்கும் 11 மருத்துவ கல்லூரிகளையும் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் 12-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வரும் 12-ம் தேதி மாலை 4 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 1,450 இடங்கள் கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து