முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

இந்தியாவில் கொரோனா வைரஸ் 3-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து, முன்களப்பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி செலுத்துவது நேற்று தொடங்கியது. 

நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதையடுத்தும், கொரோனா 3-வது அலை உருவாகியிருப்பதையடுத்தும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது.  இதுதொடர்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 2022 ஜனவரி 3-ம் தேதி முதல் 15 முதல் 18வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசியும், 10-ம் தேதி முதல் இணைநோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப்பணியாளர்களுக்கு முன்னெச்சரி்க்கை டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படும் என அறிவித்தார். அவரது அறிவிப்பின்படி, 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு இதுவரை 2 கோடி பேர் வரை தடுப்பூசி செலுத்தி விட்டனர்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று நாடு முழுவதும் தொடங்கியது.  இதற்கான பதிவு செய்தல் கோவின் இணைய தளத்தில் நேற்று முன்தினம் முதல் தொடங்கி விட்டது. பூஸ்டர் டோஸ் செலுத்த வருவோர் 2-வது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அதாவது 39 வாரங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். அப்போதுதான் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்த முடியும்.

3-வது தடுப்பூசி செலுத்தி 39 வாரங்கள் நிறைவடைந்த 60 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய்கள் இருப்போர், முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி குறித்த குறுஞ்செய்திகளை கோவின் போர்டல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

1.05 கோடி சுகாதாரப்பணியாளர்கள், 1.90 கோடி முன்களப்பணியாளர்கள், 2.75 கோடி 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய்கள் இருப்போர் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியில் எந்த தடுப்பூசியும் கலந்து வழங்கப்படாது. அதாவது இரு டோஸ் தடுப்பூசி கோவிஷீல்ட் ஒருவர் செலுத்தியிருந்தால், பூஸ்டர் டோஸும் கோவிஷீல்ட் தடுப்பூசிதான் செலுத்தப்படும். பூஸ்டர் டோஸ் செலுத்தவரும் முதியோருக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் எந்தவிதான புதிய பதிவும் தேவையில்லை. ஏற்கெனவே 2 தடுப்பூசி செலுத்தியவர்கள் ஒருமுறை தங்கள் பதிவை முன்னெச்சரிக்கை டோஸ் பிரிவில் பதிவு செய்தால் போதுமானது.

60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் ஏற்கெனவே 2 தடுப்பூசி செலுத்தியிருந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தச் செல்லும்போது, மருத்துவரிடம் எந்த சான்றிதழும் பெற்றுக் கொண்டு செல்லத் தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சென்னை, எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  முன்களப்பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய்கள் இருப்போர் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ் வழங்கும் பணியினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் சுமார் 5,65,218 சுகாதாரப் பணியாளர்கள், 9,78,023 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ள 20,83,800 நபர்கள் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில், தகுதியான 2,06,128 சுகாதாரப் பணியாளர்கள், 92,816 முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட 1,01,069 இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 4,00,013 பேர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கும் பணியினை முதல்வர் தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன்பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் த. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து