முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு வெளியீடு

திங்கட்கிழமை, 10 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 300 மாடுபிடி வீரர்களை கொண்டு போட்டி நடத்தலாம் எனவும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜனவரி 14-ல் அவனியாபுரம், 15-ம் தேதி பாலமேடு, 16-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்கான முன்ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கால்நடை மருத்துவமனைகளில், ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு உடல் தகுதிச் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என ஏற்கனவே அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடைபிடிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகபட்சமாக 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.   நிகழ்ச்சிக்கு 3 நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்திடம் மாடுபிடி வீரர்கள் அடையாள அட்டை பெற வேண்டும்.   இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை காண அனுமதிக்கப்படுவர்.   போட்டி நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு பரிசோதனை மேற்கொண்டு பார்வையாளர்கள் நெகட்டிவ் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.   ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்.  ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது.  காளையை பதிவு செய்யும் போது உரிமையாளருக்கும் பதிவு கட்டாயம், அடையாள அட்டை இல்லை என்றால் அனுமதி இல்லை.  மாடுபிடி வீரர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்று கோவிட் நெகடிவ் சான்று கட்டாயம்.  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒரு காளையுடன் உரிமையாளர், ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.   அனுமதிக்கப்பட்ட இருக்கையில் 50 சதவீதம் என்ற எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து