முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் படுதோல்வி: ஓ.பி.எஸ். கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 11 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டம் மொத்தத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பொங்கல் திருநாளை முன்னிட்டு துணிப் பையுடன் கூடிய  21 சமையல் பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் தமிழக மக்கள் உற்சாகமிழந்து காணப்படுகிறார்கள். தரமற்ற பொருட்கள், எடை குறைவு, பொருட்களின் எண்ணிக்கை குறைவு, துணிப்பை வழங்காமை என பல்வேறு உண்மை நிகழ்வுகளை மக்கள் எடுத்து கூறும் வீடியோ வலைதளங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தப் பொருளை சமைத்து சாப்பிட்டதில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதிலே மற்றுமொரு குறை என்ன வென்றால், பெரும்பாலான பொருட்கள் வட மாநிலங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகாவிலிருந்தும்தான் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஆட்டா மாவு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ளசூர்யா வீட்ரோலர் பிளோர் மில்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பொட்டலத்தில் இந்தி, ஆங்கிலம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன. ரவை உத்தரப்பிரதேச மாநிலம் ரைபரேலியில் உள்ள கன்ஹா பிளோர் மில்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டும் இடம் பெற்றுள்ளன. தமிழில் எதுவும் குறிப்பிடப் படவில்லை.

மிளகாய் தூள் மகராஷ்டிர மாநிலம், நாக்பூரிலுள்ள சுருச்சி ஸ்பைசஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தி மொழியும், ஆங்கில மொழியும் தான் இடம் பெற்றுள்ளது. தமிழ் வார்த்தையே இல்லை.  உப்பு உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆர்.கே.பி.கே. லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதிலும் தமிழ் வார்த்தை தென்படவில்லை. மாறாக ஆங்கிலமும், இந்தியும் இடம் பெற்று இருக்கின்றன. மல்லித்தூள், கடலை பருப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவை கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பி.எம்.ஐ. புட் பிராடக்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கடுகு குஜராத் மாநிலம் உஞ்சாவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. பாதி பொட்டலங்கள் எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது என்பதற்கான விவரம் இல்லை. 

மொத்தத்தில், இந்தத் திட்டம் படுதோல்வி அடைந்து இருக்கிறது என்பதுதான் உண்மை. மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் வேட்டி சேலை எல்லோருக்கும் கிடைப் பதில்லை என்ற புகாரும் ஆங்காங்கே எழுந்துள்ளது. மக்களிடையே நிலவும் அதிருப்தியை  அரசின் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வரவேண்டிய கடமை எதிர்க் கட்சியான அ.தி.மு.க.வுக்கு உள்ளது.  எனவே, முதல்வர்  இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்தத் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும், குளறுபடிகள் குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!