முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் விவகாரம்: அமித்ஷாவுடன் 17-ம் தேதி, தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வருகிற 17-ம் தேதி மாலை 4.30 மணிக்கு தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேச நேரம் ஒதுக்கி தந்துள்ளனர்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி பா.ஜ.க. தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த 17.6.2021 அன்று டெல்லி சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தமிழக எம்.பி.க் களும் பாராளுமன்றத்தில் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா 13.9.2021 அன்று தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இதுவரை அந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகைக்கு நேரில் சென்று ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தி விட்டு வந்தார். அதன்பிறகும் அந்த மசோதாவில் கவர்னர் கையழுத்திடவில்லை.

இதுதொடர்பாக கடந்த 28.12.2021 அன்று தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்களும் டி.ஆர்.பாலு தலைமையில் அவரது அலுவலகத்தில் சந்திக்க முயன்றும் முடியவில்லை. இதனால் கோரிக்கை மனுவை அவரது அலுவலகத்தில் கொடுத்து விட்டு வந்தனர். அதன் பிறகு உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து மனு கொடுக்க நேரம் ஒதுக்கி தர கோரியும் கொடுக்கவில்லை. அவரிடம் கொடுக்க வேண்டிய மனுவும் அவரது அலுவலகத்தில் தான் கொடுக்க முடிந்தது.

இந்த சூழலில் கடந்த 8.1.2022 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டி மீண்டும் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் ‘நீட்’ தேர்வை நீக்க சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அப்போது இந்த கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜனதா எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இந்த சூழலில் டெல்லியில் தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். உள்துறை மந்திரி அமித்ஷாவை பார்க்கவும் முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் அமித்ஷா அலுவலகத்தில் இருந்து டி.ஆர்.பாலு எம்.பி.யை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அப்போது தமிழக எம்.பி.க்களை அமித்ஷா வருகிற 17-ம் தேதி சந்திக்க நேரம் ஒதுக்கி தந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி டி.ஆர்.பாலு எம்.பி. கூறியதாவது., டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை வருகிற 17-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவினர் சந்தித்து பேச நேரம் ஒதுக்கி தந்துள்ளனர். பா.ஜனதாவை தவிர்த்து 10 எம்.பி.க்கள் சென்று அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளோம். ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் தருமாறு அவரிடம் எடுத்து சொல்வோம். அந்த மசோதாவை வாங்கி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

அமித்ஷாவை சந்திக்கும் குழுவில் டி.ஆர்.பாலு (தி.மு.க.), நவநீத கிருஷ்ணன் (அ.தி.மு.க.), நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), வெங்கடேசன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) கே.ஜெயக்குமார் (காங்கிரஸ்), திருமாவளவன் (விடுதலை சிறுத்தை), வைகோ (ம.தி.மு.க.) உள்பட 10 எம்.பி.க்கள் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து