முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1.19 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசாக சாதனை ஊக்கத் தொகை: தமிழக அரசு அறிவிப்பு

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து போக்குவரத்து துறை அரசு முதன்மை செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழகத்தில்  சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.

குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது.  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்,  தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.  

 பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில், 2021-ம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு  85 ரூபாய் வீதமும், 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும்,  200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் பொங்கல் பரிசாக சாதனை ஊக்கத்தொகை வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இந்த உத்தரவின்படி, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து  161 பணியாளர்களுக்கு, மொத்தம் 7 கோடியே 1 லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து