Idhayam Matrimony

பொங்கல் விழா கொண்டாடி தமிழர்களின் பண்பாட்டை உலகிற்கு உணர்த்துவோம்

புதன்கிழமை, 12 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

உழைப்பவர் அனைவரும் உழவரே ஆவர். பொங்கல் விழா என்பது உழைப்பாளர் விழா. தமிழ் மொழியை தமிழ் இன மக்களை பெருமைப்படுத்தும் வகையில் உலகில் 57 நாடுகளில் சுமார் 7.5 கோடி தமிழர்கள் சாதி, மதம், இனம், நிறம், கட்சி, அரசியல் வேறுபாடு இல்லாமல் கொண்டாடி வருகின்றனர். 

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு பொலிவான ஒளியினை பகிர்ந்து அளித்து வரும் முதன்மையான சக்தி பகவான் சூரியன், அரிசியை போர்த்தி இருக்கும் நெல் மற்றும் பயிர்களுக்குள் இனித்திடும் கரும்பையும், வெல்லத்தையும் முதன் முதலாக கண்டறிந்தவன் தமிழன். 1931-ம் ஆண்டு திருச்சியில் தந்தை பெரியார் தலைமையில் கூடிய தமிழறிஞர்கள் பொங்கல் விழா என்பது தமிழர்களின் மத சார்பற்ற விழா என்று பிரகடனம் செய்தனர். சங்க காலத்தில் காளைகளை அடக்கும் விழா, ஏறு தழுவுதல் என்று பெயரிட்டு நடைபெற்று வந்தது. காளையை அடக்கும் வீரர்களுக்கு பரிசாக துண்டில் சல்லிக்காசுகளை நிரப்பி காளை மாட்டின் கொம்புகளில் கட்டும் வழக்கம் இருந்து வந்தமையால் இவ்விழா சல்லிக்கட்டு என்றழைக்கப்பட்டது. இதுதான் இப்போது காலப்போக்கில் வடமொழி எழுத்து கலந்து ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது. சல்லிக்கட்டு என்று நாம் அழைப்பதே முறையானதாகும். 

சுழன்றும் ஏர் பின்னது என்பதன் பொருள், ஏர் சுழன்றால்தான் உலகத்து உயிர்கள் வாழும் என்பதாகும். ஆண்டுதோறும் தை 1-ம் நாள் இவ்விழா நடைபெறுகிறது. தை என்பதை எவ்வளவு சிறப்புடையது என்பதை பாருங்கள். தை என்பது முதலில் ஒரு எழுத்தாகும். அடுத்து தை என்பது ஓர் சொல்லாகும். இது போல் தை என்பது இயல் தமிழ், தையா, தையா என்பது இசை தமிழாகவும் தை என்ற ஓர் எழுத்து இயல், இசை, நாடகமாக மாறும் சிறப்பை பெறுகிறது. 

வட நாட்டு விழாக்கள் எல்லாம் மதம், மூட நம்பிக்கை கலந்து புனையப்பட்ட கதைகளின் அடிப்படையில் ஆரியர்களை உயர்வுபடுத்தியும், திராவிடர்களை தாழ்வுபடுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டவை ஆகும். அவைகளை புறக்கணித்து எந்தவித மூட நம்பிக்கையையும் இல்லாது மத சார்பற்ற முறையில் இயற்கையை போற்றும் வகையில் பொங்கல் விழா கொண்டாடி தமிழர்களின் பண்பாட்டை உலகிற்கு உணர்த்துவோம். 

எஸ். முத்துமணி

முன்னாள் எம்.பி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து