முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுவர் தினம்: சென்னையில் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

சனிக்கிழமை, 15 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

அய்யன் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும்  குறளோவியம் ஒவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பரிசுத் தொகையையும் அவர் வழங்கினார்.

திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு நேற்று தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின்,  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

தீராக்காதல் திருக்குறள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற குறளோவியம்  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான ஒவியப் போட்டி, அதனைத் தொடர்ந்து, வான்புகழ் வள்ளுவன் இயற்றிய, முக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய, உலகப் பொதுமறையாம் திருக்குறள்,  இன்றைய தலைமுறையினரைச் சென்றடையும் வகையில் தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் நிதிஉதவியோடு, தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் முதலாவதாக, குறளோவியம் என்ற தலைப்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, குறட்பாக்களின் செம்மாந்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மாநில அளவில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் சிறந்த 365 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தினசரி மேசை நாட்காட்டியாக அச்சிடப்பட்டும், அழகுற வரையப்பட்ட சிறந்த ஓவியங்களைத் தொகுத்து காலப்பேழை புத்தகமாகவும், நிகழும் திருவள்ளுவர் தினமான நேற்று முதல்வர் ஸ்டாலின், வள்ளுவர் கோட்டத்தில் வைத்து வெளியிட்டார்.

மேலும், இப்போட்டியில் பங்கேற்று பள்ளி அளவிலான பிரிவில் முதல் பரிசு பெற்ற செல்வி கு.ஜெய்கீர்த்தன்ஹா (சிந்திமாடல் சீனியர் செகண்டரி பள்ளி, சென்னை), இரண்டாம் பரிசு பெற்ற செல்வன் பு.கீர்த்திவாசன் (வேலம்மாள் வித்யாலயா, ஆலப்பாக்கம், சென்னை) மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற செல்வி மோ.சு.பிருந்தா (ஸ்ரீராமகிருஷ்ணாமிஷன் வித்யாலயா, சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி, கோயம்புத்தூர்) மற்றும் கல்லூரி அளவிலான பிரிவில் முதல் பரிசு பெற்ற ராஜேஷ், (அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம்),  இரண்டாம் பரிசு பெற்ற பாலாஜி (அரசு கவின் கலைக் கல்லூரி, கும்பகோணம்), மூன்றாம் பரிசு பெற்ற ராஜேஷ் (அரசு கவின் கலைக் கல்லூரி, சென்னை) ஆகியோருக்கு முதல்வர் முதல் பரிசாக ரூ.50,000/-, இரண்டாம் பரிசாக  ரூ.30,000/-, மூன்றாம் பரிசாக  ரூ.20,000/- மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அத்துடன், சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் பாலாஜி பிரசாத் சிறப்பாக ஓவியம் வரைந்ததைப் பாராட்டி அவருக்கு முதல்வர் சிறப்புப்பரிசு வழங்கினார். 

 இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க. பொன்முடி,  தங்கம் தென்னரசு, முத்துசாமி, சாமிநாதன், ராஜகண்ணப்பன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு,  மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்  தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர்            மகேசன் காசிராஜன்,  செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் / தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், தமிழறிஞர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து