முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களிடையேயான உறவை மேம்படுத்த முன்னாள் நீதிபதி தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

புதன்கிழமை, 19 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

காவலர், பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடவும், புதிய பயிற்சி முறைகளைப் பரிந்துரைத்திடவும் சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சி.டி. செல்வம்  தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்திட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த 13.09.2021 அன்று சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், காவலர்,  பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல் துறை பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களுக்குத் தேவையான திட்டங்களையும், புதிய பயிற்சி முறைகளையும் பரிந்துரைக்கும் நோக்கத்துடன் காவல் ஆணையம் ஒன்று மீண்டும் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், புதிதாக காவல் ஆணையம் ஒன்றைத் தற்போது அமைத்திடவும், அந்தக் காவல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சி.டி. செல்வத்தை தலைவராகவும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கா. அலாவுதீன், முனைவர் கே.இராதாகிருஷ்ணன், மனநல மருத்துவர் சி.இராமசுப்பிரமணியம், முன்னாள் பேராசிரியர் முனைவர் நளினி ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும், காவல் துறை (குற்றப்புலனாய்வு) கூடுதல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வாலை  உறுப்பினர் மற்றும் செயலராகவும் நியமனம் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆணையம், காவலர்களின் நலன் மற்றும் காவல்துறையின் பல்வேறு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் அரசுக்குத் தனது பரிந்துரைகளை அளிக்கும்.  காவல்துறையின் செயல்பாடுகளைச் சிறப்பாக மேம்படுத்துவதற்கும், இணையவழிக் குற்றங்களைத் தடுத்திடவும், சேவை வழங்குவதில் மனிதாபிமானத்துடன் கூடிய நட்புறவோடு பொதுமக்களை அணுகுவதற்கும், உரிய நடவடிக்கைகள் மூலமாக காவல்துறையினரின் சேவையை மேலும் வலுவூட்டுவதற்கும், இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் அமைந்திடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து