முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் தொகுப்பு விநியோகம் குறித்த புகார்: தவறு செய்வோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 21 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.  

தைப் பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பத்தினருக்கும் என மொத்தம் 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட முதல்வர் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.  அதன்படி பொங்கல் தொகுப்பு பையினை விநியோகம் செய்திட ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நல்ல முறையில் நடைபெற்றிருந்த நிலையில், மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் சில நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களில் சில குறைபாடுகள் இருந்ததாக புகார்கள் அரசுக்கு வரப்பெற்றன.  இவற்றை விசாரித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிய தரத்துடன் பொருட்களை வழங்கத் தவறிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.  

இதனைத் தொடர்ந்து பரிசுத் தொகுப்பு விநியோகம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொங்கல் பரிசுப் பொருட்கள் கொள்முதல் மற்றும் விநியோகத்தின்போது துறையால் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து அலுவலர்கள் விளக்கினர்.  மேலும், தரக் கட்டுப்பாடு குறித்த விவரங்களும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. 

அதன் பின்னர் பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் மீது, கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் முதல்வர் அறிவுறுத்தினார்.  பொது மக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டுமெனவும், அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை  எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது எனவும் முதல்வர் தெரிவித்தார்.  

மேலும், நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டுமென்றும், தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அரசு அலுவலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி மற்றும் நிதித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து