முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழை விலகியது: தமிழகத்தில் இனி வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை மையம் தகவல்

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலிருந்து வடகிழக்கு பருவமழை விலகியது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இனி வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்குப்பருவமழை, வடகிழக்குப் பருவமழை என இரண்டு பருவமழை காலங்களிலும் நல்ல மழை பொழிவு இருக்கும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை அக்டோபர் இறுதி வரை நீடித்தது. வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 27 முதல் தொடங்கியது. நவம்பர் மாதத்தில் முழுவதுமாக கொட்டித்தீர்த்தது. பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. ஆறுகளில் பெருவெள்ளம் பாய்ந்தது. அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. டிசம்பர் மாதத்தின் இறுதியிலும் மழை கொட்டியதால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நடப்பாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையில் வடகிழக்குப் பருவ காலத்தில் பெய்யும் மழையை காட்டிலும், 59 சதவீதம் அதிகமாக கிட்டத்தட்ட 71 சென்டிமீட்டர் மழை பெய்தது. சென்னையில் 136 சென்டிமீட்டர் மழை கிடைத்தது. இதன் காரணமாக வழக்கத்தை விட சென்னையில் 74 சதவிகிதம் அதிகம் வடகிழக்கு பருவமழையால் கிடைத்தது. தை மாதத்தில் கூட திடீரென மழை பெய்தது.

மழை நின்றாலும் அதிகாலை நேரங்களில் மூடுபனி சூழ்ந்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் குளிரின் தாக்கம் குறைந்தபாடில்லை. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர். கொடைக்கானல், உதகையில் உறைபனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலிருந்து வடகிழக்கு பருவமழை விலகியது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்ததாவது.,  வடகிழக்கு பருவமழை நேற்று, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா , ராயலசீமா , தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரள பகுதிகளில் இருந்து விலகியது. இனி 26ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும். அதேசமயம் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை  என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்தாண்டு அக்டோபர் 25ல் தொடங்கிய வடகிழக்கு பருவமழை சுமார் 3 மாதங்கள் நீடித்திருந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழையால் மழை பொழிவு இருந்தது. இந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதியே வடகிழக்குப்பருவமழை விலகி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தை மாதம் பிறந்து சில நாட்களே ஆனாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாசி மாதம் அதாவது பிப்ரவரி மாத இறுதி வரைக்குமே பனியின் தாக்கம் அதிகம் காணப்படும். இந்த ஆண்டு நல்ல மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து