முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 1-ம் தேதி முதல் பள்ளி - கல்லூரிகள் திறப்பு: இரவு நேர ஊரடங்கு இன்று முதல் 'ரத்து' கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஒன்று முதல் 12 -ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகள் திறக்கப்படுவததாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், இன்று முதல் இரவு நேர ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படுவதாக தெரிவித்த அவர் வரும் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் கிடையாது எனவும் அறிவித்துள்ளார். 

இரவு ஊரடங்கு...

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் அமலில் இருந்து வருகிறது. 

ஆலைசனைக் கூட்டம்...

தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொற்று குறைந்தது...

அரசு மேற்கொண்ட நடவடிக்கையினால் கொரோனா நோய்த் தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளதாகவும், போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் இருப்பினும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை மீள திரும்புவதற்கு ஏதுவாக, பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.

பிப்ரவரி 15 வரை...

தற்போது நோய்த் தொற்று பரவல் குறைந்திருப்பினும் பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பின்வரும் கட்டுப்பாடுகள் மட்டும் வரும் 1-2-2022 முதல் 15-2-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும். சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும். 

திருமண நிகழ்ச்சி...

மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை. பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை. அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை. உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும். 

திரையரங்குகள்....

துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

உள் அரங்குகள்... 

உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். வழக்கமான பயிற்சிகள் நடத்த தடையில்லை. அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 சதவீத பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.

சலூன்கள்...

அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) போன்றவை ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். அனைத்து பொழுதுபோக்கு/கேளிக்கைப் பூங்காக்கள் நீர் விளையாட்டுகளைத் (Water sports) தவிர்த்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும் மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.  

பள்ளிகள் திறப்பு...

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும். தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இரவு நேர ஊரடங்கு....

இன்று (28.1.2022) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கு கிடையாது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து