முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதாரம் வலுவாக இருக்கிறது: நீட் தேர்வு வந்ததற்கு தி.மு.க.தான் முழு பொறுப்பு: ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டம்

சனிக்கிழமை, 12 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

நீட் தேர்வு வந்ததற்கு தி.மு.க.தான் முழு பொறுப்பு. இதற்கான ஆதாரம் வலுவாக இருக்கிறது. எனவே, இதை மூடி மறைக்க முடியாது. அ.தி.மு.க. ஒருபோதும் நுழைவுத் தேர்வையோ அல்லது நீட் தேர்வையோ ஆதரித்தது இல்லை என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக பேசிய தி.மு.க. தலைவர், கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் எந்தத் தேர்வு மையத்தில் நீட் நடந்ததென்று சொல்ல முடியுமா என்று அ.தி.மு.க.வைப் பார்த்துக் கேட்பது தி.மு.க. தலைவரின் அறியாமையையும், நீட் தேர்வின் வரலாறு தெரியாமல் அவர் பேசுகிறார் என்பதும் கண்கூடாகத் தெரிகிறது.

தி.மு.க.வும், அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசும் தான் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. நீட் தேர்வு வந்ததற்கு தி.மு.க. தான் முழுப் பொறுப்பு. இதற்கான ஆதாரம் வலுவாக இருக்கிறது. எனவே, இதை மூடி மறைக்க முடியாது. அதே சமயத்தில் அ.தி.மு.க. ஒருபோதும் நுழைவுத் தேர்வையோ அல்லது நீட் தேர்வையோ ஆதரித்தது இல்லை.

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல, அன்று நீட்டிற்கு கையெழுத்து போட்டுவிட்டு, இன்று அதற்கு எதிராக நீலிக் கண்ணீர் வடிக்கிறது தி.மு.க. 

நீட் தேர்வை அறிமுகப்படுத்திய மத்திய காங்கிரஸ் அரசிலிருந்து தி.மு.க. ஏன் உடனடியாக வெளி வரவில்லை? 2010-ம் ஆண்டே திமுக எதிர்ப்பு தெரிவித்தது, கடிதம் எழுதியது என்று கூறும் தி.மு.க. தலைவர், ஏன் மத்திய ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை 2013 வரை திரும்பப் பெறவில்லை? அரசே ஒரு விதியை போட்டுவிட்டு அதை அரசே எதிர்ப்பது என்பது விசித்திரமான ஒன்று என்பது தி.மு.க. தலைவருக்கு புரியவில்லையா? இதுதான் தி.மு.க. செய்த மிகப் பெரிய துரோகம். இதற்கெல்லாம் பதில் சொல்ல தி.மு.க. தலைவர் தயாரா?

எனவே, நீட் தொடர்பாக திமுக என்ன வழக்கை தொடுத்தது? எங்கே தொடுத்தது? வழக்கு எண் என்ன? தி.மு.க.வின் சார்பில் என்ன வாதம் வைக்கப்பட்டது? என்பதையெல்லாம் திமுக தலைவர் நாட்டு மக்களுக்கு ஆதாரத்துடன் தெரியப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்தபடியாக, அ.தி.மு.க. நுழைவுத் தேர்வை சட்டப்பூர்வமாக ரத்து செய்தது என்று சட்டமன்றத்தில் நாங்கள் உண்மைக்கு மாறான தகவலை கூறுவதாக தி.மு.க. தலைவர் கூறி இருக்கிறார்.  கடந்த தி.மு.க. ஆட்சியின் கடைசி காலத்தில் ஏழை, எளிய, கிராமப்புற மாணவ, மாணவியருக்கு, பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு துரோகம் செய்து விட்டு, இப்போது பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் தி.மு.க. தலைவருக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, வரலாறு தெரியாமல் மனம் போன போக்கில் பேச வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து