முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வுக்கு எதிராக நாம் தமிழர் கட்சிதான் போட்டியிடுகிறது: சீமான்

வியாழக்கிழமை, 17 பெப்ரவரி 2022      அரசியல்
Image Unavailable

பா.ஜ.க.வுக்கு எதிராக நாம் தமிழர் கட்சிதான் போட்டியிடுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, 

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 60 வேட்பாளர்களை கடத்தி, முன்மொழிந்தவரை மிரட்டுவது, அவர் உறுதியாக இருந்தால், வேட்பாளர்களை மிரட்டுவது என ஆளுங்கட்சியினர், நாம் தமிழர் கட்சியினரை பின்வாங்க செய்து விட்டனர். 

உண்மையான நேர்மையான அரசியல் உருவாக வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் இதற்கான தொடக்கத்தை செய்ய வேண்டும். பணம் இருப்பவர்கள்தான் அதிகாரத்துக்கு வரமுடியும், அதிகாரத்தைச் செலுத்த முடியும் என்றால், முதலாளிகளுக்கான அதிகாரம் கட்டமைக்கப்படுமே தவிர, உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கான அதிகாரம் எங்கிருக்கும், பிறகு எப்படி இதை மக்களாட்சி என்று கூறுவது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக ஊடகங்கள் விவாதிப்பது இல்லை. அப்படியென்றால், இந்த நிலை எப்போது ஒழியும். கள்ள ஒட்டு செலுத்துவது, ஆட்களை கடத்துவது, மிரட்டுவது இதற்கு ஏன் ஜனநாயகம் என்று பெயர் வைத்தனர். இதற்காகவா நம் முன்னோர்கள் சிறையில் அடைபட்டு வாடினர்.

தமிழகத்தில் மாற்றத்துக்கான கட்சி இல்லை. தி.மு.க.வை விட்டால் அ.தி.மு.க, அ.தி.மு.க.வை விட்டால் தி.மு.க.தான் எனப் பேசுவது ஏற்புடையது அல்ல. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரித்ததைவிட, சீமானுக்கும், நாம் தமிழருக்கும் வாக்களித்து விட வேண்டாம் என தி.மு.க.வினர் கூறியதுதான் அதிகம். இது எந்தமாதிரியான அணுகுமுறை என்று பாருங்கள்.

பல இடங்களில் பா.ஜ.க.வை எதிர்த்து தி.மு.க. போட்டியிடவே இல்லை. நாகர்கோயில், குளச்சலில் போட்டியிடவில்லை. அ.தி.மு.க.வும் போட்டியிடவில்லை.  பா.ஜ.க.வுக்கு எதிராக நாம் தமிழர் கட்சிதான் போட்டியிடுகிறது. அப்படி என்றால், பா.ஜ.க.வை தி.மு.க. எங்கே எதிர்க்கிறது?என்று சீமான் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து