முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்ற தி.மு.க.வினர் பதவி விலக வேண்டும்: விலகாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கம் - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 4 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வென்ற தி.மு.க.வினர் பதவி விலகாவிட்டால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் நகராட்சித் தலைவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டி வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு தி.மு.க போட்டி வேட்பாளராக ஷபீர் அகமது மனுத்தாக்கல் செய்தார். ஆம்பூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு தி.மு.க சார்பில் எஜாஸ் அகமது அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், ஷபீர் அகமது மனுத்தாக்கல் செய்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சித் தலைவர் பதவிக்கு தி.மு.க சார்பில் கார்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து போட்டி வேட்பாளராக நளினி சுரேஷ்பாபு மனுத்தாக்கல் செய்தார். மயிலாடுதுறை நகராட்சித் தலைவர் பதவிக்கு தி.மு.கவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக செல்வராஜ் அறிவிக்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து போட்டி வேட்பாளராக லிங்கராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சித் தலைவர் தேர்தலில் தி.மு.கவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் வெண்ணிலாவை எதிர்த்து பரிமளா போட்டி வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து தி.மு.க சார்பில் நகராட்சித் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றார். அதேபோல, குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சித் தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து தி.மு.க தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, குளச்சல் உள்ளிட்ட சில இடங்களிலும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்கள் களமிறங்கினர். கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்ட தி.மு.க.வினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ., திமுக கவுன்சிலர்கள் போட்டி வேட்பாளர்களாக உடன்பாட்டை மீறி களமிறங்கியதுடன் பல இடங்களில் தோழமைக் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உதவியுடன் வெற்றி பெற்றுள்ளது. 

குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, கூட்டணியில் ஒதுக்கப்பட்ட நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் இடங்கள் அனைத்திலுமே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. கட்சி தலைமையின் முடிவுக்கு மாறாக, எதிரணியோடு கைகோர்த்துக் கொண்டு, பதவியை மட்டுமே நோக்கமாக வைத்து செயல்பட்டுள்ள போக்கு அனுமதிக்க முடியாததாகும் என்று தெரிவித்துள்ளார். 

இதேபோல் விடுதலை சிறத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இதுதொடர்பாக கூறியுள்ளதாவது, கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் உத்தரவை மீறி நின்று வெற்றிப் பெற்ற திமுக வேட்பாளர்களை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். மேலும் கூட்டணி அறத்தைக் காத்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற தி.மு.க.வினர் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். 

ஆலோசனைக்கு பிறகு மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது.

அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. பேரறிஞர் அண்ணா சொன்ன "கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டில்"  மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன். 

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மாவட்ட கழகச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து