முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முருகன் ஆலயங்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா பழனியில் இன்று தேரோட்டம்

வியாழக்கிழமை, 17 மார்ச் 2022      ஆன்மிகம்
Image Unavailable

தமிழகத்தில் முருகப் பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில் இன்று பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனியில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. 

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருஆவினன் குடி எனப் போற்றப்படும் பழனியில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானவை தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத் திருவிழா. பங்குனி உத்திரத் திருவிழாவில் தேரோட்ட வைபவத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி, தீர்த்தக்காவடி, பால் காவடி என பல்வேறு காவடிகளை சுமந்து கொண்டு பாதயாத்திரையாக பழனிக்கு வருவதுண்டு. 

கோடை காலத்தின் தொடக்க விழாவாக வரும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தீர்த்தக்காவடி எடுத்து வரும் முருக பக்தர்கள் முருகப் பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, பக்தர்கள் கொடுமுடி காவிரியாற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்து பழனி ஆண்டவருக்கு தீர்த்த அபிஷேகம் செய்து வழிபடுவது மரபு. கடந்த இரண்டு ஆண்டகளாக கொரோனா நோய்த் தொற்று காரணமாக பக்தர்களின் பங்களிப்பு இல்லாமல் பங்குனி உத்திர விழா களையிழந்து காணப்பட்டது. 

தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டதால், அனைத்து கோயில்களும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அதே போல், பழனியிலும் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த  12-ம் தேதியன்று கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் முருகனுக்கு உச்சிக்கால பூஜையில் 16 வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தங்கமயில் வாகனம் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கியதில் இருந்து முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் கிரிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நான்காம் நாளான செவ்வாய்கிழமை தங்கமயில் வாகனத்தில் கிரிவீதியுலா எழுந்தருளினர். இதை முன்னிட்டு, மலையடிவாரம் நெய்க்காரப்பட்டி மஹாலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு தங்க மயில் வாகனத்தில் ஏற்றம் கண்டு சந்நிதி வீதி மற்றும் கிரிவல வீதிகளைச் சுற்றி ஊர்வலம் நடைபெற்றது. 

திருஆவினன்குடி கோயில் அருகிலுள்ள சௌமிய நாராயண கவரநாயக்கர் மண்டபத்தில் வள்ளி நாயகி அம்மன் திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. இன்று வெள்ளிக்கிழமையன்று முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்ட வைபவம் நடைபெற உள்ளது. தேரோட்ட வைபவத்தைக் கண்டு தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் காவடி சுமந்து வந்து முருகப் பெருமானை வழிபடுவர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. தொடந்து அதிகாலை 5.30 மணிக்கு வள்ளியம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 3.20 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மேலக்கோவில் பந்தல் மண்டபம் முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. வள்ளி திருக்கல்யாணம் பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா சென்று கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. இதையொட்டி வழக்கமாக இரவு 7 மணிக்கு நடைபெறும் ராக்கால அபிஷேகம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது

இதனிடையே கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அடிப்படை வசதிகளையும் சுகாதார வசதிகளையும் நிறைவேற்றி தர அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு பக்தர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதே தமிழகத்தில் உள்ள சுவாமி மலை, பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து