முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 97 சதவீத அறிவிப்புகள்: இ.பி.எஸ். பேட்டி

வியாழக்கிழமை, 24 மார்ச் 2022      அரசியல்
Image Unavailable

அ.தி.மு.க. ஆட்சியில் 97 சதவீத அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கை மீது தெளிவாகவும், விரிவாகவும் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார். அவர் சுட்டிக்காட்டிய குறைகளை பொறுத்துக் கொள்ள முடியாத நிதி அமைச்சர், எதிர்கட்சித் துணைத் தலைவர் பேசிக் கொண்டிருக்கும்போதே அவையில் இருந்து வெளியேறினார்.  மேலும் அவர் வெளியேறும் போது கையில் இருந்த காகிதங்களை வீசி விட்டுச் சென்றார்.  பிரதான எதிர்கட்சியை அவமதிக்கும் வகையில் நிதி அமைச்சர் நடந்து கொண்டதை சட்டப்பேரவையில் விளக்கிக் கூற முற்பட்டோம். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்காததால் வெளிநடப்பு செய்தோம். எங்களின் வெளிநடப்பை கொச்சைப்படுத்தும் வகையில் பேரவைத் தலைவர் நொண்டிச்சாக்கு கூறி வெளிநடப்புச் செய்ததாக விமர்ச்சித்தது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. 

நேற்று முன்தினம் முதல்வர் 110-வது விதியின் கீழ் அ.தி.மு.க. சார்பாக 2011-ல் இருந்து 2021 வரை எத்தனை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன. எவ்வளவு பணி நடைபெறுகிறது. எவ்வளவு கைவிடப்பட்டுள்ளது என்று சொன்னார்.  ஆனால் உண்மை செய்தியை மறைத்து விட்டார். அந்த புத்தகத்தில் முதல்வரே தெளிவுபடுத்தி இருக்கிறார்.

2011 முதல் 2021 வரை 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் 1704 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டமன்றத்தில் தாக்கல் செய்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதில் நிறைவேற்றப்பட்ட பணிகள் 1167.  அதோடு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பணிகள் 491. ஆக மொத்தம் 1658 பணிகள் இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு திட்டத்தை அரசாங்கம் அறிவித்தால் ஒரே ஆண்டில் நிறைவேற்ற முடியாது.  ஒரு திட்டத்தை எடுத்தவுடன் ஒரே வருடத்தில் நிறைவேற்ற முடியாது. அது அவர்களுக்கும் தெரியும். இது தான் நடப்பு. அது எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி அப்படித்தான் இருக்கும்.

ஆனால் இடையில் கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டது. அப்போது 9 மாத காலம் எந்த பணியும் செய்யவில்லை. அறிவிக்கப்பட்ட பணிகள் கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் தான் பணிகள் மந்தமாக இருந்ததே தவிர அரசாங்கத்தால் அல்ல. 

20 அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என்று சொல்லி இருக்கிறார். அதில் 17 அறிவிப்புகள் 2020-21-ம் ஆண்டு கொரோனா தொற்று இருந்த காலம். அப்போது அரசாங்கத்தில் பல பணிகளுக்கு விடுமுறை விட்டு விட்டோம். ஊழியர்கள் வராததால் அதற்கான திட்டத்தை தயாரிக்க முடியவில்லை.  எனவே அரசாணை வெளியிடுவதில் காலதாமதம் ஆகி விட்டது. அதற்குள் தேர்தல் வந்து விட்டது. அதனால் நிறைவேற்ற முடியவில்லை. 26 அறிவிப்புகள் கைவிடப்பட்டதாக புத்தகத்தில் கூறி உள்ளார். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

மத்திய அரசிடம் இருந்து அனுமதி கிடைக்க வேண்டும். நிலம் எடுக்க வேண்டும். இப்படி பல பிரச்சினைகள் இருந்ததால் 26 அறிவிப்புகள் கைவிடப்பட்டன. 1704 அறிவிப்புகளில் 26 தான் கைவிடப்பட்டுள்ளது. எனவே 97 சதவீத பணிகள் நிறைவேற்றிய அரசு அம்மாவின் அரசு.

வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள் மீது குற்றம் சுமத்துவதற்காக சொல்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் நிறைய திட்டங்கள் மூலம் மக்கள் நன்மை அடைந்தார்கள். இவை வரலாற்று சிறப்புமிக்க திட்டங்கள். 110 விதி என்றாலே என்ன திட்டங்கள் வருகிறது என்று மக்கள் எதிர்நோக்கி இருந்தார்கள். அந்த திட்டங்களை எல்லாம் 10 ஆண்டுகளில் மக்களுக்காக நிறைவேற்றி உள்ளோம். அதில் குறைசொல்ல வேண்டும் என்பதற்காக முதல்வர்  இதை சொல்லி இருக்கிறார். இதில் எந்த குறையுமே கிடையாது. அப்படி பார்த்தால் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!