முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து: 3 மின்உற்பத்தி நிலையங்களை கட்ட இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்

புதன்கிழமை, 30 மார்ச் 2022      இந்தியா
Image Unavailable

யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் திட்டமிடப்பட்டிருந்த மின் உற்பத்தி திட்டப் பணிகளை இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு வழங்கி அதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று உள்ளார். இதில் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் மரபுசாரா மின் உற்பத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தியாவிடம் செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் முன்னிலையில் கையெழுத்தானது.

யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு, அனலைத் தீவு ஆகிய தீவுப்பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறைவேற்ற கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவை சேர்ந்த சினோசோர்- எடெக்வின் நிறுவனத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்து இருந்தது. தமிழகத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள இலங்கை தீவுகளில் சீன நிறுவனம் மின் உற்பத்தி பணியை தொடங்க அனுமதி அளிப்பது தமிழகத்தை ஒட்டிய பாக். வளைகுடா பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கும் என மத்திய அரசு அப்போதே தனது அதிருப்தியை இலங்கை அரசிடம் தெரிவித்தது.

இந்த நிலையில் மின் உற்பத்தி திட்டப் பணிகளை கடனுக்கு பதிலாக மானிய அடிப்படையில் நிறைவேற்றி தருவதாக இந்தியா இலங்கையிடம் தெரிவித்தது. இதையடுத்து மின் திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இலங்கை அரசு நிறுத்தி வைத்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த இலங்கைக்கான சீன தூதர், இலங்கையின் இந்த நடவடிக்கை வெளிநாட்டு முதலீட்டை பாதிக்கும் என்றார்.

இதற்கிடையே கடல்சார் மீட்பு கூட்டு மையம் அமைக்க இந்தியா இலங்கை அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் கூட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட வாய்ப்பு உருவாகி இருப்பதால் வடக்கு பகுதியில் பாயின்ட் பெட்ரோ, பெசாலை, குருநகரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க இந்தியா உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் திட்டமிடப்பட்டிருந்த மின் உற்பத்தி திட்டப் பணிகளை இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு வழங்கி அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

முன்பு சீன நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாட்டுக்கு அருகே உள்ள இலங்கை யாழ்ப்பாணத்தில் சீனா கால் பதிக்கும் முயற்சியை தடுக்கும் வகையில் இந்தியா நடவடிக்கை எடுத்து சீனாவிடம் மின் திட்டங்களை தட்டி பறித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து