முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 17-ம் தேதி நீட் நுழைவு தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வியாழக்கிழமை, 31 மார்ச் 2022      இந்தியா
Neet 2022 03 31

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 17-ம்தேதி நீட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தகுதி தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. 2014-15-ம் ஆண்டுகளில் கோர்ட்டில் வழக்குகள் இருந்ததால் இந்த தேர்வு நடத்தப்படவில்லை.

2016-ம் ஆண்டு 8 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். 2017-ல் சுமார் 11 லட்சம், 2018-ல் சுமார் 13 லட்சம், 2019-ல் சுமார் 15 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். 2020-ம் ஆண்டு 15 லட்சத்து 97 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டு நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 777 மாணவ- மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 8 லட்சத்து 70 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினார்கள்.

நீட் தேர்வு நடைமுறையால் தமிழகத்தில் கிராமப்புற ஏழை-எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா நீட் தேர்வுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டார். என்றாலும் கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த சமயத்தில் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. அன்று முதல் தமிழகத்தில் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வு ஜூலை மாதம் 17-ந்தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவ - மாணவிகள் நீட் தேர்வு எழுதுவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆன்லைன் விண்ணப்பம் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. மே மாதம் 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதன் பிறகு விண்ணப்பத்தில் சிறு சிறு திருத்தங்கள் மேற்கொள்ள 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும்.

தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய கல்வித்துறை, தேசிய மருத்துவக் கழகம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி நீட் தேர்வுக்கான அட்டவணையை இறுதி செய்ய உள்ளனர். ஆன்லைன் விண்ணப்பங்கள் மூலம் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதற்கேற்ப இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வு தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளது. அதே சமயத்தில் மாணவ-மாணவிகளை நீட் தேர்வுக்கு தயார் செய்வதற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் அதிகளவு மருத்துவ படிப்புக்கு தேர்வாக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து