முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் கோலாகமாக தொடங்கியது சித்திரைத் திருவிழா

செவ்வாய்க்கிழமை, 5 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Meenashi 2022 04 05

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகள் கழித்து பக்தர்களின் பங்கேற்போடு தொடங்கவுள்ள மதுரை சித்திரைத் திருவிழாவின் முதல் நாளான நேற்று மீனாட்சியம்மன் திருக்கோவிலில் கொடியேற்ற நிகழ்வுடன் மிக கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதனை அடுத்து மதுரை மாவட்ட மக்கள், பக்தர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2 ஆண்டுகள்...

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா, கொரோனா பெருந்தொற்றுக் காலமான கடந்த 2 ஆண்டுகள் கோவில் வளாகத்திலேயே பக்தர்களின் பங்கேற்பின்றி நடைபெற்றது. இந்நிலையில், தற்போது கொரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், சித்திரைத் திருவிழா வெகு கோலாகலமாக நடைபெறவுள்ளது.

முதல் நிகழ்வு...

இதனையடுத்து சித்திரைத் திருவிழாவின் முதல் நிகழ்வான கொடியேற்றம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பக்தர்களின் பங்கேற்புடன் நேற்று நடைபெற்றது. சுவாமி சன்னதிக்கு முன்புறம் உள்ள தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நேற்று காலை 10.30 மணியிலிருந்து 10.54 மணிக்குள் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, அறங்காவலர் கருமுத்து கண்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் நம்பிக்கை...

கொடியேற்றப்படும் கொடிப்பட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள ரிஷபம் தர்ம உருவாகவும், ஆத்மாவின் உருவாகவும் மதிக்கப்படுகிறது. ஆத்மாக்களையும் தர்மத்தையும் கீழ்நிலையில் இருந்து உயர்நிலைக்கு கொண்டு செல்லும் இறைவனின் கருணை இக்கொடியேற்ற திருவிழாவின் மூலமாக விளக்கப்படுகிறது என்பதும் பொதுவகையில் உயிர்களுக்கு அருள்புரியும் இறைவன் சிறப்பு வகையில் அருள்புரிய இப்பன்னிரண்டு நாட்களும் ஆயத்தமாகக் காத்திருக்கிறார் என்பதை இக்கொடியேற்றம் உணர்த்துவதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

வீதியுலா வந்தனர்...

நேற்று இரவு வெள்ளி சிம்மாசனத்தில் கோவிலின் உள்ளே அமைந்துள்ள குலாலர் மண்டகப்படியில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளினர். பிறகு அங்கிருந்து புறப்பாடாகி நான்கு மாசி வீதிகளில் கற்பகவிருட்சம் மற்றும் சிம்ம வாகனங்களில் எழுந்தருளி இரவு 7 மணியளவில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். சித்திரைத் திருவிழாவின் 2ம் நாளான இன்றுஅம்மனும் சுவாமியும் பூத-அன்னவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

மக்கள் மகிழ்ச்சி...

இந்த நிலையில், கொரோனா படிப்படியாக குறைந்ததையடுத்து, நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் கடந்த மார்ச் இறுதியில் திரும்பிப் பெறப்பட்டன. கட்டுப்பாட்டுகள் தளர்த்தப்பட்டவுடன் வரும் முதல் திருவிழா என்பதால் மதுரை மாவட்ட மக்கள், பக்தர்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு

வரும் 12-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 13-ம் தேதி திக் விஜயம், 14-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், ஏப்ரல் 15-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை நிகழ்வும் நடைபெற உள்ளது. விழாவின்முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு 16-ம் தேதி காலை 5.50 முதல் 6.20 மணிக்குள் நடைபெறுகிறது திருவிழா நடைபெறும் 12 நாட்களிலும் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!