முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர்கோவில் மலையில் இருந்து நாளை மதுரைக்கு புறப்படுகிறார்: 62 ஆண்டுகளுக்கு பிறகு வண்டியூர் தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார் கள்ளழகர்

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
kallalager-1 2022 04 12

Source: provided

மதுரை : நாளை 14-ம் தேதி கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்படும் கள்ளழகர், 62 ஆண்டுகளுக்கு பிறகு வண்டியூர் தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்வது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையின் முத்திரை பதிக்கும் மீனாட்சி சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மாலை மாசி வீதிகளில் நடைபெறும் சுவாமி, அம்மன் வீதி உலா நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை 14-ம்  தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், 15-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா முடிவுறும் தருவாயில் அழகர்கோவில் கள்ளழகர் சித்திரை திருவிழா தொடங்குகிறது. அதன்படி நாளை 14-ம் தேதி கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார்.  மதுரை மாநகரில் தொன்று தொட்டு நடந்து வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி 16-ம் தேதி நடக்கிறது. அன்று ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். அதன்பின் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.  வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கியபின் அன்று இரவு வண்டியூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் எழுந்தருள்வார். அப்போது வண்டியூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கும்.

வண்டியூர் வைகை ஆற்றின் நடுவில் தேனூர் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அழகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுவது வழக்கம். பிரசித்தி பெற்ற இந்த மண்டபம் பராமரிப்புகள் இல்லாததாலும், வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் காலப்போக்கில் சிதிலமடைந்தது. இதனால் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தேனூர் மண்டபம் வைகை ஆற்றின் நடுவே காட்சிப் பொருளாகவே இருந்து வந்தது. இதனால் இந்த மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவில்லை.  இந்நிலையில் அரசு உத்தரவுப்படி வண்டியூர் தேனூர் மண்டபம் ரூ.‌ 40 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மண்டபத்தில் கள்ளழகரை எழுந்தருளச் செய்ய கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி கோவில் இணை ஆணையாளர் அனிதா தலைமையிலான குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனூர் மண்டபத்தில் உறுதித் தன்மையை ஆய்வு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து பரிட்சார்த்த முறையில் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும் கருட வாகனம் கொண்டு செல்லப்பட்டு அங்கு ஏற்றி இறக்கி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரீட்சார்த்த முறை வெற்றி பெற்றதை தொடர்ந்து வருகிற 17-ம் தேதி தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளுவார் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 62 ஆண்டுகளுக்கு பிறகு வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளுவது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து