முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் அதிவிமர்சையாக நடந்த குரு பெயர்ச்சி விழா

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
guru-2022-04-14

Source: provided

நீடாமங்கலம்: குருபகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு நேற்று வியாழக்கிழமை அதிகாலை 4.16 மணிக்கு பிரவேசம் செய்தார். இதனை முன்னிட்டு நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ளது ஆபத்சகாயேஸ்வரர் கோவில். சோழ வள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98-வது தலமாக இது விளங்குகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற குரு பரிகாரஸ்தலமாகிய ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது. 

குரு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை கலங்காமற்காத்த வினாயகருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.  அதனைத்தொடர்ந்து 108 கலசாபிஷேக யாகபூஜைகளும் குருபகவானுக்கு 108 கலச அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து குருபகவானுக்கு தங்ககவசம் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.  நேற்று அதிகாலை குருபகவானுக்கு மகா அபிஷேகம் ,தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டது. குருபகவான் பெயர்ச்சியடைந்த அதிகாலை 4.16 மணிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. 

குரு பெயர்ச்சியை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதே தமிழகம் முழுவதும் உள்ள குரு பகவான் வீற்றிருக்கும் தலங்களில் குரு பெயர்ச்சி அதி விமர்சையாக கொண்டாடப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து