முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: பச்சை பட்டுடுத்தி தங்கக் குதிரையில் வைகையில் இறங்கினார் கள்ளழகர்! : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Alagar 16-04-2022

Source: provided

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக, பச்சை பட்டுடுத்தி தங்கக்குதிரையில் வைகையாற்றில் கள்ளழகர் நேற்று காலை இறங்கினார். பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

மதுரை சித்திரை திருவிழா கடந்த 5ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14ம் தேதி மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், 15ம் தேதி தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. சித்திரை பெருவிழாவையொட்டி இந்த ஆண்டு அழகர்கோயிலில் இருந்து அழகர், கள்ளழகர் வேடம் பூண்டு கடந்த 14ம் தேதி தங்கப்பல்லக்கில் மதுரை புறப்பட்டார். கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் ஆகிய இடங்களை கடந்து நேற்று காலை மூன்றுமாவடி வந்தார். அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நடந்தது.

அழகர் வேடம் தரித்த ஏராளமான பக்தர்கள் கள்ளழகரை எதிர் கொண்டு வர்ணனை பாடல்கள் பாடினர். தோல் பைகளில் அடைக்கப்பட்டிருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆடிப்பாடி வரவேற்றனர். அதைத்தொடர்ந்து புதூர், ரேஸ்கோர்ஸ் காலனி, ரிசர்வ்லைன், தல்லாகுளம் உள்ளிட்ட 456க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு கள்ளழகர் காட்சி அளித்தார். தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு நேற்று முன்தினம் இரவு கள்ளழகர் வந்தார். 

நள்ளிரவு 12 மணியளவில் திருமஞ்சனமாகி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகருக்கு சூட்டப்பட்டது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு மேல் கள்ளழகர், தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. 

நேற்று அதிகாலை 3 மணி அளவில் தங்கக்குதிரையில் அமர்ந்தபடி, ஆயிரம் பொன் சப்பரத்தில் வைகை ஆற்றுக்கு கள்ளழகர் புறப்பட்டார். கள்ளழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்ததால் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தல்லாகுளத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி ஆழ்வார்புரம் பகுதிக்கு கள்ளழகர் வந்தார். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதை காண ஆற்றின் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் வெள்ளமென திரண்டிருந்தனர். 

வைகை ஆற்றின் கரையோரம், ஆற்றுப் பாலம் என திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் தலைகளாக தென்பட்டன. வளமையும், செழுமையும் நிலைக்க தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் ‘பச்சைப்பட்டு’ உடுத்தி வைகையாற்றில் காலை 6.12 மணிக்கு இறங்கினார். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் “கோவிந்தா... கோவிந்தா...” என்று எழுப்பிய கோஷம் விண்ணை முட்டியது. சர்க்கரை நிரப்பிய செம்புகளில் தீபம் ஏற்றி கள்ளழகருக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

ஏற்கனவே, வீரராகவ பெருமாள் வைகை ஆற்றுக்கு வந்து மண்டகப்படியில் இருந்தார். அவர், தங்கக்குதிரையில் வந்த கள்ளழகரை வரவேற்று 3 முறை வலம் வந்தார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர். வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ராமராயர் மண்டபம் வந்தார். நேற்று மதியம் 12 மணி அளவில் ராமராயர் மண்டபத்தில் கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்விக்கும் தீர்த்தவாரி நடைபெற்றது. நேற்று இரவு 9 மணி அளவில் வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலில் கள்ளழகர் எழுந்தருளினார். இன்று காலை 6 மணிக்கு வீரராகவ பெருமாள் கோயிலில், கள்ளழகர் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவையில் உலா வருகிறார். காலை 9 மணிக்கு சேஷ வாகனத்தில் 11 மணிக்கு தேனூர் மண்டபத்தை அடைகிறார். பிற்பகல் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். மாலை 3.30 மணிக்கு அனுமார் கோயிலுக்கு கள்ளழகர் வருகிறார்.

அங்கு அங்கப்பிரதட்சணம் நடக்கிறது. இரவு ராமராயர் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு 11 மணிக்கு திருமஞ்சனமாகி விடிய விடிய தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது.18ம் தேதி அதிகாலை 6 மணிக்கு மோகனாவதாரத்தில் வீதி உலா வருகிறார். பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். இரவு 11 மணிக்கு தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி  பூப்பல்லக்கில் எழுந்தருளுகிறார். 

அதே திருக்கோலத்தில் கருப்பணசாமி கோயிலில் இருந்து கள்ளழகர் மலைக்கு புறப்படுகிறார். மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக 19ம் தேதி காலை 9 மணிக்கு அழகர்கோயிலை அடைகிறார். கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவத்தையொட்டி மதுரை நகரங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து