முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனிக்கு கிடைத்த வரவேற்பை கண்டு வியந்த கெவின் பீட்டர்சன்

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2022      விளையாட்டு
Tony 2022-04-26

Source: provided

நடப்பு ஐபிஎல் சீசனின் 38-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றிக்காக சென்னை அணி இறுதி வரை போராடி தோல்வியை தழுவியது. கடந்த போட்டியைப் போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டோனி வெற்றியை தேடி கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இறுதி ஓவரில் அவர் விளையாடினார். இருந்தும் வெற்றிக்கோட்டை அவரால் இந்த முறை கடக்க முடியவில்லை.

நடப்பு சீசனில் கெவின் பீட்டர்சன் ஆங்கில மொழி வர்ணனையாளராக போட்டிகளை வர்ணனை செய்து வருகிறார். "நம்ப முடியாத வகையில் உள்ளது. அதனால் தான் இந்தியாவில் ஐபிஎல் நடத்தப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது. டோனி எனும் மனிதன் களத்திற்கு பேட் செய்யும் வரும் போது அவருக்கு கிடைக்கும் வரவேற்பு அமோகமாக உள்ளது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இருந்தாலும் ரசிகர்களின் சத்தம் கமெண்ட்ரி பாக்ஸ் வரை எதிரொலித்தது. அவருக்கும், சிஎஸ்கே அணிக்கும், ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் கிடைக்கும் ஆதரவு அபாரமானது. போட்டியில் சென்னை தோல்வியை தழுவிய பிறகும் சத்தம் குறையவில்லை" என தெரிவித்துள்ளார் பீட்டர்சன்.

__________________

மின்வெட்டு பிரச்சினை: ஜார்கண்ட் அரசுக்கு சாக்ஷி டோனியின் கேள்வி

நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் எதிரொலியால், பல்வேறு மாநிலங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு  பிரச்சினைக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின் நெருக்கடி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் மனைவி சாக்‌ஷி சிங் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது.,  ஜார்கண்டின் வரி செலுத்துபவராக, இங்கு பல ஆண்டுகளாக மின் நெருக்கடி பிரச்சினை ஏன் உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். நாங்கள் எங்கள் பங்கைச் சரியாக செய்து வருவதன் மூலம், மின் ஆற்றலைச் சேமித்து வருகிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

_______________

ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து எலினா ஸ்விடோலினா வேதனை

உலக பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் முன்னணி வீராங்கனையாக விளங்குபவர் எலினா ஸ்விடோலினா. இவர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர். கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இவர் தற்போது மாட்ரிட் மற்றும் ரோமில் நடக்கும் டென்னிஸ் இருந்து விலகியுள்ளார். இது குறித்து எலினா ஸ்விடோலினா கூறுகையில், "நீண்ட காலமாக எனது முதுகில் ஏற்பட்டுள்ள காயத்துடன் போராடி வருகிறேன். இந்த வலியால் போட்டிகளுக்கு என்னை தயார் செய்து கொள்ள முடியவில்லை. 

இதற்கிடையில், என் தாய்நாடான உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதை என்னால் தாங்கமுடியவில்லை. என் இதயம் வேதனையில் உள்ளது. உக்ரேனிய மக்களின் தைரியம் தான் டென்னிஸ் களத்தில் நான் போராட எனக்கு உந்துதலை தருகிறது" என அவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் எலினா ஸ்விடோலினா இவ்வாறு பேசியுள்ளார்.

______________

பயிற்சியாளரை மீண்டும் பிரிந்த எம்மா ரடுகானு

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று பிரபலமானவர் எம்மா ரடுகானு.19 வயதே ஆன எம்மா ரடுகானு கனடாவில் பிறந்தவர். ஆனால் சிறு வயது முதலே பிரிட்டன் நாட்டிற்காக டென்னிஸ் விளையாடி வருகிறார். தகுதி சுற்றின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்ற இவர் அந்த தொடரில் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டியில் பட்டம் வென்றார். நேற்று முன்தினம் உலகின் உயரிய விளையாட்டு விருதுகளில் ஒன்றான லாரஸ் விருதை எம்மா ரடுகானு பெற்றார்.

கடந்த ஐந்து மாதங்களாக  டோர்பென் பெல்ட்ஸ் என்பவர் இவருக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது எம்மா ரடுகானு டோர்பென் பெல்ட்சை பிரிவதாக அறிவித்துள்ளார். இது குறித்து எம்மா ரடுகானு கூறுகையில், "டோர்பென் பெல்ட்ஸ் சிறந்த மனிதர்.  நாங்கள் ஒன்றாக இருந்த காலத்தில் எங்களுக்குள் இருந்த புரிதல்களை நான் ரசித்து இருக்கிறேன். கடந்த அரை வருடத்திற்கு மேலாக டோர்பனின் பயிற்சி, தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்புக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடத்தில் எம்மா ரடுகானு 4-வது முறையாக தனது பயிற்சியாளரை பிரிந்துள்ளார்.

______________

கண்ணாடி மாஸ்க் அணிந்து பந்துவீசிய ரிஷி தவான்

இந்த சீசனில் இதுவரை எந்த ஆட்டத்திலும் ரிஷி தவான் களமிறங்காத நிலையில், சென்னை அணிக்கு எதிராக பஞ்சாப் அணியில் இடம்பிடித்தார். இதில் 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தாலும், சென்னை அணியின் ஷிவம் துபே, எம்எஸ் டோனி ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ரிஷி தவான். இதனிடையே, ரிஷி தவான் நேற்று ஒருவகையான ‘மாஸ்க்’ அணிந்து பந்துவீசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அது என்ன வகை  மாஸ்க், எதற்காக அணிந்திருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்ததையடுத்து, அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் பயிற்சியின்போது ஈடுபட்டிருந்த ரிஷி தவானின் மூக்கு பகுதியில் காயம் ஒன்று ஏற்பட்டது. இதற்காக அவரது மூக்கில் ‘மைனர் ஆபரேஷன்’ ஒன்று செய்யப்பட்டது. அதன் காரணமாகவே  ரிஷி தவான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்ணாடி மாஸ்க் அணிந்து பந்துவீசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து