முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தின் தாக்கம் எதிரொலி: பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

திங்கட்கிழமை, 2 மே 2022      தமிழகம்
Anbil-Mahes 2021 07 13

நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் பள்ளிகளுக்கு விரைவில் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஒடிசா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு வெப்பம் காரணமாக காலை 6 மணிமுதல் 9 மணிவரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது. இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் பள்ளிக்கல்வித்துறை உள்ளது. கடந்த காலத்தில் தென்மாவட்டங்களில் இதுமாதிரியான சாதி மோதல்கள் இருந்து வந்தது. தற்போது படிப்பறிவு அதிகரித்த நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது.

நெல்லை மாவட்டத்தில் ஜாதியை குறிப்பிடும் வகையில் கயிறு கட்டியதில் ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விசாரணை நடந்து வருகிறது. அனைவருக்கும் சமத்துவமான அரசாக இந்த அரசு இருந்து வருகிறது. இதனால் மாணவர்கள் சமத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் மாணவர்கள் ஈடுபடாமல் இருப்பதற்கு அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும்.

மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதை மாடலாக கருதக்கூடாது. இளம் கன்று பயமறியாது என்பதை மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்குவதில் காட்டக் கூடாது. தேவைப்படும் இடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு போக்குவரத்து துறையிடம் ஆலோசித்து வருகிறோம். மாணவர்கள் படிக்கட்டு பயணங்களை தவிர்ப்பதற்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பொது இடங்களில் மாணவிகள் மோதிக்கொண்டது மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் உள்ள மன அழுத்தத்தின் காரணமாக மோதிக்கொண்டார்களா? ஹீரோசத்தில் மோதிக் கொண்டார்களா? சமூகத்தில் நடந்த சில சம்பவங்களை பார்த்து கற்றுக் கொண்டார்களா? என கேள்வி எழுந்துள்ளது. இது மாதிரியான சம்பவங்களை தடுக்க 2.50 லட்சம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 1,500 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இதனை தமிழகம் முழுவதும் செயல்படுத்து வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து