முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதார நெருக்கடி எதிரொலி: இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் ராமேஸ்வரம் வருகை: அகதிகள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு

திங்கட்கிழமை, 2 மே 2022      தமிழகம்
Sri-Lanka 2022 05 02

இலங்கை வவுனியாவில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர், அகதிகளாக நேற்று ராமேஸ்வரம் வந்தனர். இதுவரை அகதிகளாக தமிழகத்திற்கு வந்தவர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அத்தியாவசியப் உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை, பலமடங்கு உயர்ந்துள்ளதால் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். கடந்த மாதம் 21ம் தேதி மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் வசித்து வந்த 4 குடும்பங்களை சேர்ந்த 18 பேரும், 24ம் தேதி இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆனைக்கோட்டை காக்கைத்தீவு பகுதியில் வசித்து வந்த 5 குடும்பங்களை சேர்ந்த 15 பேரும், அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு வந்தனர்.

இந்நிலையில் இலங்கை வவுனியா மாவட்டம் கற்குளம் பகுதியில் வசித்து வந்த ராஜலட்சுமி(56), இவரது மகன் தயாளன்(27), இவரது மனைவி லதா (26), மற்றும் குழந்தைகன் தன்ஷிகா(6), தக்சரா(2) ஆகியோர் நேற்று அதிகாலை படகு மூலம் ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரையில் வந்து இறங்கினர். தகவலறிந்த மரைன் போலீசார், 5 பேரையும் ராமேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமிற்கு அழைத்து சென்று, அங்கு தங்க வைத்துள்ளனர்.

தமிழகத்திற்கு அகதிகளாக வந்தது குறித்து தயாளன் கூறுகையில், ‘‘கூலி வேலை செய்து வந்தேன். பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடங்கி விட்டன. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வேலை ஏதும் கிடைக்கவில்லை. வீட்டில் இருந்த நகைகள் மற்றும் டிவி உள்ளிட்ட பொருட்களை மிகவும் குறைந்த விலைக்கு விற்று, எப்படியோ சமாளித்து, குடும்பத்தை நடத்தி வந்தேன். கையிருப்பு செலவாகி வந்த நிலையில், வருமானத்திற்கு வேறு வழியில்லாததால், தமிழகத்திற்கு குடும்பத்தினரை அழைத்து வந்து விட்டேன் என்றார்.

இவர்களையும் சேர்த்து இதுவரை தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ள இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை, 80 ஆக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து