முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் கேப்டன் ஆன டோனி: ருதுராஜ்-கான்வே அபார ஆட்டத்தால் ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை..!

திங்கட்கிழமை, 2 மே 2022      விளையாட்டு
chennai-team-2022-05-02

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி 99 ரன்கள் குவித்தார்.

46-வது லீக்...

சென்னை, ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் 46-வது லீக் ஆட்டம்புனேவிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. டாஸை வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். முதல் 8 போட்டிகள் வரை ரவீந்திர ஜடேஜா தலைமையில் களமிறங்கிய சென்னை அணி எம்.எஸ். டோனி தலைமையில் விளையாடியது.

ருதுராஜ் அதிரடி...

சென்னை அணி நிர்ணயித்த 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஹைதராபாத் அணி20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. சென்னை அணியின் பேட்டிங்கின்போது தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ், டெவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். முதல் 6 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடிய ருதுராஜ் அதன் பின்னர் வேகம் எடுத்தார். பந்துகளை சிக்ஸருக்கும், பவுண்டரிகளும் பறக்கவிட்டார்.

ருதுராஜ்-கான்வே...

சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கும்வேளையில் ருதுராஜ் ஆட்டமிழந்தார். அவர் 57 பந்துகளில் 99 ரன்கள் குவித்து வீழ்ந்தார். இதில் தலா 6 பவுண்டரிகள், சிக்ஸர்கள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு ருதுராஜ்-கான்வே ஜோடி 182 ரன்கள் குவித்தது. ஐபிஎல் போட்டிகளில் எந்தவொரு விக்கெட்டுக்கும் சென்னை அணி சார்பில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகும் இது. இதற்கு முன்2020-ம் ஆண்டு சென்னை வீரர்கள் ஷேன் வாட்சன் - ஃபா டூ பிளெசிஸ் ஜோடி 181 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது.மறுமுனையில் விளையாடிய கான்வே 55 பந்துகளில் 85 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் டோனி 7 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வில்லியம்சன்...

ஹைதராபாத் அணிசார்பில் அபிஷேக் சர்மா 39, எய்டன் மார்கிரம் 17,கேப்டன் கேன் வில்லியம்சன் 47, சஷாங்க் 15, வாஷிங்டன் சுந்தர் 2 ரன்கள்எடுத்தனர். நிக்கோலஸ் பூரன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி தரப்பில் முகேஷ் சவுத்ரி 4, பிரட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து