முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வினாத்தாள் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      தமிழகம்
school-30-06-20212

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை 8.37 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். வினாத்தாள் அறையின் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் வினாத்தாள் அறை அருகே யாராவது செல்கிறார்களா? என்பது 24 மணி நேரமும் தொடர்ந்து ரகசியமாக கண்காணிக்கப்படுகிறது. வினாத்தாள் மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை ...

தமிழகத்தில் பிளஸ்2 மாணவர்களுக்கு நாளை (5ம் தேதி) பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வினை பள்ளிகளில் பயிலும் 8.37 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழகம் முழுவதும் 3119 மையங்களில் இத்தேர்வினை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 6ந்தேதி 3,936 மையங்களில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளை 9.55 லட்சம் மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

கல்வி அதிகாரிகளுக்கு...

அதனைத் தொடர்ந்து பிளஸ்1 பொதுத்தேர்வு 10ந்தேதி தொடங்குகிறது. 5ந்தேதி தொடங்கும் பொதுத்தேர்வு 31ந்தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை பள்ளிகள் வழியாக மட்டும் 26 லட்சத்து 76 ஆயிரத்து 675 மாணவ-மாணவிகள் எழுதுவதற்கு தயாராக உள்ளனர். பொதுத்தேர்வினை எந்த ஒரு சர்ச்சைக்கும் இடமளிக்காத வகையில் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

தேர்வு ஒத்திவைப்பு...

பிளஸ்2 திருப்புதல் தேர்வு கடந்த மாதம் நடந்தபோது ஒரு சில இடங்களில் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னதாக வெளியாகி கல்வித்துறையை அதிர்ச்சி அடையச் செய்தது. தொடர்ந்து நடந்த 3 தேர்வுகளின் வினாத்தாள்கள் அடுத்தடுத்து கசிந்ததால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

பாதுகாப்பு ஏற்பாடு...

திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிந்ததுபோல பொதுத்தேர்வில் வெளியானால் கல்வித்துறையின் மீது பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் நம்பிக்கை இழக்கக்கூடும் என்பதால் அனைத்து மாவட்டத்திலும் மிக கவனமாக செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளது.

தேர்வுத்தாள்கள்...

நாளை தேர்வு தொடங்க இருப்பதால் வினாத்தாள்கள் அனைத்தும் சென்னையில் இருந்து தனித்தனி வாகனங்களில் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த வாகனங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றடைந்தன. அன்றே அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் தேர்வுத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. அந்த அறை அருகே தேவையில்லாமல் யாரும் செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக செல்போனுடன் வினாத்தாள் பாதுகாப்பு அறைக்குள் யாரும் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

30 நிமிடங்களுக்குள்... 

தேர்வு பணியில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் மட்டுமின்றி ரகசியங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களுக்கு தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக 30 நிமிடங்களுக்குள் வினாத்தாள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுவரையில் இல்லாத அளவிற்கு வினாத்தாள் பாதுகாப்பு அறைக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்வுத்துறை தயாரித்து வழங்கும் வினாத்தாள்கள் பாடம் வாரியாக பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு உள்ளது.

துப்பாக்கி ஏந்திய....

அந்த வினாத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் வினாத்தாள் அறை ‘சீல்’ வைத்து மூடப்பட்டு உள்ளது. “ஸ்ட்ராங் ரூம்” என்று சொல்லக்கூடிய அந்த அறையில் வினாத்தாள் கட்டுகள் வைத்து பாதுகாக்கப்படும். அந்த அறையை 24 மணி நேரமும் போலீசார் கண்காணிக்கிறார்கள். வினாத்தாள் அறையின் உள்பகுதியிலும் வெளிப்பகுதியிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் வினாத்தாள் அறை அருகே யாராவது செல்கிறார்களா? என்பது 24 மணி நேரமும் தொடர்ந்து ரகசியமாக கண்காணிக்கப்படுகிறது.

போலீசாருக்கு....

வினாத்தாள் வைக்கப்பட்டு உள்ள அறை பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வெளியாட்கள் செல்ல அனுமதி இல்லை. மீறி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அங்கு வரக்கூடியவர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்ய நோட்டு புத்தகமும் போடப்பட்டு உள்ளது. அந்த பகுதிக்கு செல்லக்கூடியவர்கள் அதில் தங்கள் பெயர் விவரங்கள் மற்றும் வருகையின் நோக்கம் குறித்த தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

16 இடங்களில்... 

ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை மாவட்டத்தில் 16 இடங்களில் வினாத்தாள் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் 5 முதல் 10 மையங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!