முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் ஆலோசகராக தருண் கபூர் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2022      இந்தியா
Tarun-Kapoor 2022 05 03

Source: provided

புதுடெல்லி : மத்திய பெட்ரோலியத் துறை முன்னாள் செயலாளர் தருண் கபூர் பிரதமர் மோடியின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பொறுப்பேற்கும் நாள் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இவர் இந்த பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1987ம் ஆண்டு இமாச்சலப்பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான தருண் கபூர் பெட்ரோலியத்துறை செயலாளர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வுபெற்றார்.

இதற்கு முன்பு பல்வேறு பதவிகளை வகித்த தருண் கபூர், தற்போது பிரதமர் மோடியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படும் தருண் கபூருக்கு, மத்திய அரசுத் துறை செயலாளருக்கு இணையான அந்தஸ்து மற்றும் சம்பளம் வழங்கப்படும். அதேபோல், ஹரி ரஞ்சன் ராவ் மற்றும் ஆதிஷ் சந்திரா ஆகியோர் பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர பல உயர்மட்ட அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற விவகார அமைச்சக செயலாளராக உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி கியானேஷ்குமார், கூட்டுறவு அமைச்சக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவை செயலகத்தின் செயலாளராக இருந்த அகிலேஷ்குமார் ஷர்மா, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அகிலேஷ்குமார் சர்மாவின் இடத்தில் அமைச்சரவை செயலாளராக, பணியாளர் மற்றும் பயிற்சித்துறை செயலாளராக இருந்த பிரதீப்குமார் திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து