முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதியின் ஒப்புதலை பெற கவர்னர் மூலம் நீட் விலக்கு மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பு : முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

புதன்கிழமை, 4 மே 2022      தமிழகம்
CM-1 2022-04-25

Source: provided

சென்னை : நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக கவர்னர் அலுவலகத்திலிருந்து செய்தி வரப்பெற்றது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

இது குறித்து சட்டசபையில் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது, 

தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்துவரும் நீட் தேர்விலிருந்து நமது மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்பதற்காக இந்த அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதன் முதல் படியாக இந்த மாமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவை கவர்னர் மறுபரிசீலனை செய்யுமாறு கோரியதும், அதுகுறித்து அனைத்துச் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரிவாக விவாதித்து, சில தினங்களுக்குள்ளாகவே ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, கவர்னருக்கு  மீண்டும் அனுப்பி வைத்தோம்.  

இதுதொடர்பாக கவர்னரை நான் நேரில் சந்தித்து, மேலும் தாமதமின்றி இந்தச் சட்டமுன்வடிவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும், பிரதமரையும்,  மத்திய உள்துறை அமைச்சரையும் சந்தித்து இந்தச் சட்டமுன்வடிவிற்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தினேன். அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து ஜனாதிபதியின் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார்கள்.   

இந்தத் தொடர் முயற்சிகளின் பயனாக, ஒரு வரலாற்று நிகழ்வாக, நாம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்டமுன்வடிவினை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக கவர்னர் அனுப்பி வைத்துள்ளார்கள் என்ற தகவலை கவர்னரின் செயலர் என்னிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார்  என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்தச் சட்டமுன்வடிவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து