முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் 3,936 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது9 லட்சத்து 55 ஆயிரத்து 474 பேர் எழுதுகிறார்கள்

வியாழக்கிழமை, 5 மே 2022      தமிழகம்
5 Ram 9

Source: provided

சென்னை:

தமிழகம் முழுவதும் 3,936 மையங்களில் இன்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. மொத்தம் 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வுகள் வரும் 30-ம் தேதி வரை தேர்வு நடக்க இருக்கிறது.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாதாந்திர தேர்வு, காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்பட்டது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த முடியாத காரணத்தால், ‘ஆன்லைன்' வகுப்புகள் வழியாகவே பாடங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் படிப்படியாக தொடங்கப்பட்டது. முதலில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கும், அதன் பின்னர் 6 முதல் பிளஸ்-1 வகுப்பு வரையிலும் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, கொரோனா பரவல் குறைவாக இருந்தாலும், இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்பதில், பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக உள்ளது. அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

தேர்வு மையங்கள், பறக்கும் படைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மாவட்ட வாரியாக முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் நடந்தன. இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று (6-ம் தேதி) தொடங்கி 30-ந்தேதி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மொத்தம் 3,936 மையங்களில் நடக்கிறது. இந்தத் தேர்வை, 9 லட்சத்து 55 ஆயிரத்து 474 பேர் எழுதுகிறார்கள். இதில், மாணவர்கள் 4 லட்சத்து 86 ஆயிரத்து 887 பேர், மாணவிகள் 4 லட்சத்து 68 ஆயிரத்து 587 பேர் ஆவார்கள்.

இதற்கிடையே தேர்வு எழுதும் மாணவர்கள்  அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே ஆறடி இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும், கிருமிநாசினி கொண்டு தேர்வறைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் அவசியம்,  தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல் கட்டாயம், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தேர்வு மையங்களில் முழுமையாக கடை பிடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை  இயக்குநர் செல்வ விநாயகம் பெயரில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அறிக்கை ஒன்று வெளியானது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது., பொதுத்தேர்வின் தேர்வறையில் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது. பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேற்று எவ்விதமான அறிக்கையும் வெளியிடவில்லை. மாணவர்கள் எவ்வித பதற்றமும் அடையாமல் தேர்வை எழுதலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து