முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்தேர்வின் போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      தமிழகம்
OPS 2022 01 28

Source: provided

சென்னை : பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்ற மே மற்றும் ஜூன் மாதங்களில் தமிழகம் முழுவதும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் ஆங்காங்கே அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் நிலக்கரி பற்றாக்குறை, மின் பயன்பாடு அதிகரிப்பு, நிலக்கரியை எடுத்து வரும் ரயில் பெட்டிகள் பற்றாக்குறை என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். 

இந்தச் சூழ்நிலையில், 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் 05-05-2022 அன்று துவங்கி 28-05-2022 வரையிலும், 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் 06-05-2022 அன்று துவங்கி 30-05-2022 வரையிலும் நடைபெற உள்ளது. இதனையொட்டி, கல்லூரித் தேர்வுகளும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், தமிழக மின்சார வாரியத்தின் தலைவர் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடப்பதையொட்டி தடையில்லா மின்சார விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். 

இருப்பினும் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் மேல்நிலைப்பள்ளியில் மின் தடை ஏற்பட்டு, பின்னர் அரை மணி நேரத்தில் சரி செய்யப்பட்டதாகவும், வட சென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனவே, முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்ற மே மற்றும் ஜூன் மாதங்களில், தேர்வு மையங்களில் மட்டுமல்லாமல் அனைத்து இடங்களிலும் மின் வெட்டு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து