முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

208-வது பிறந்த நாள்: சென்னையில் இன்று ராபர்ட் கால்டுவெல்லின் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை

வெள்ளிக்கிழமை, 6 மே 2022      தமிழகம்
Robert-Caldwell 2022 05 06

Source: provided

சென்னை : 208-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் இன்று ராபர்ட் கால்டுவெல்லின் திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர். 

திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூல் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை உண்டாக்கிய  நூலாகும். தமிழில் நற்கருணை தியான மாலை (1853), தாமரைத் தடாகம் (1871), ஞான ஸ்நானம் (கட்டுரை),  நற்கருணை (கட்டுரை) உள்ளிட்ட நூல்களையும் இயற்றிய திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் 07.05.1815-ல் அயர்லாந்தில் பிறந்து, ஸ்காட்லாந்தில் கல்வி கற்று, 08.01.1838 அன்று இந்தியா வருகை தந்து 53 ஆண்டுகள் அயராது தமிழ்ப்பணி, இறைப்பணி, கல்விப்பணி மற்றும் சமூகப் பணியாற்றி 1891-ம் ஆண்டில்  கொடைக்கானலில் வாழ்ந்து மறைந்தார்.  

மேலும் இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, ஜெர்மன், பிரெஞ்சு போன்ற மேலைநாட்டு மொழிகளிலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு போன்ற தென்னக மொழிகளிலும் சிறந்த  புலமைப் பெற்றிருந்தார்.  இதன்மூலம் ஆரிய இன மொழிகள் வேறு, திராவிட மொழி இனங்கள் வேறு என்றும், தமிழுக்கும் வடமொழிக்கும் எவ்வித உறவும் இல்லை என்றும், வடமொழி இன்றியே தனித்து இயங்கக் கூடிய மொழி தமிழ் மொழி என ஒப்பிலக்கண ஆய்வின் மூலம் உலகுக்கு உணர்த்திய பெருமைக்குரியவர்.

அவர் பிறந்த நாளையும், அவரின் தமிழ்ப் பணியையும் நினைவு கூறும் வகையில் சென்னை காமராசர் சாலையில் (மெரினா கடற்கரையில்) அமைந்துள்ள இராபர்ட் கால்டுவெல்லின் திருவுருவச் சிலைக்கு இன்று 07.05.2022 ஆம் நாளன்று காலை 09.00  மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் மாலை அணிவித்து வணங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில்  அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து