முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வங்கக்கடலில் இன்று புதிய புயல் 'அசானி' உருவாகிறது : சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சனிக்கிழமை, 7 மே 2022      தமிழகம்
Weather-Center 2021 06-30

Source: provided

சென்னை : வங்கக்கடலில் இன்று புதிய புயல் 'அசானி' உருவாகும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் நாளை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

புயலாக வலுவடையும்...

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.,வங்கக்கடலில் அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இன்று புயலாக வலுவடைந்து வடமேற்கு நகர்ந்து மே 10ல் வட ஆந்திரா, ஒடிசா கரையோரத்தில் நிலவும்.வங்கக்கடலில் உருவான புயல் வடக்கு - வடகிழக்கில் நகர்ந்து ஒடிசா கடற்கரையில் நீடிக்கும்.

17 மாவட்டங்களில்...

புயலின் எதிரொலியாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வரும் 9ம் தேதி (நாளை) புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை,மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, காரைக்கால், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

வெப்பநிலை...

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் குறைந்தபட்சமாக 82 டிகிரி அளவை எட்டக்கூடும்,'என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வானிலை... 

இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில்., தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகர்ந்து (சனிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், இது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் மேலும் வலுவடைந்து புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

புயல் எச்சரிக்கை... 

இது சூறாவளி புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதால் அடுத்த வாரம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் கங்கை நதியின் மேற்கு வங்க மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவின் கிழக்கு கரையோர பகுதி மக்களுக்கு இந்த சூறாவளி புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தயார் நிலையில்... 

வானிலை ஆய்வு மையத்தின் இந்த முன்னெச்சரிக்கையை தொடர்ந்து பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. 2021ல் யாஸ், 2020ல் ஆம்பன், 2019ல் பானி ஆகிய 3 சூறாவளி புயல்கள் ஒடிசாவின் பகுதிகளை கோடையில் தாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து