முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

21 மாநகராட்சிகள், 63 நகராட்சிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் : சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சனிக்கிழமை, 7 மே 2022      தமிழகம்
CM-2 2022 05 07

Source: provided

சென்னை : கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதுபோல் நகர்ப்புறங்களில் மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே மருத்துவ நிலையங்கள் அமைய உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது.,

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன். நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கும் திட்டம் தொடங்கப்படும். கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதுபோல் நகர்ப்புறங்களில் மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே இந்த மருத்துவ நிலையங்கள் அமைய உள்ளன. முதற்கட்டமாக சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 63 நகராட்சி பகுதிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்  ஏற்படுத்தப்படும். 180 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் இந்த மருத்துவ நிலையங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டப்படும்.

இந்த 708 மருத்துவ நிலையங்களிலும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் புறநோயாளிகள் சேவை செயல்படுத்தப்படும். இந்த மருத்துவ நிலையங்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளுனர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இந்த திட்டத்தின்மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மருத்துவ நிலையங்களிலும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்து,  2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் நல்வாழவு என்னும் இலக்கை தமிழ்நாடு எட்டும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!