முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகர பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் பயணம் : சட்டசபையில் பெருமித விளக்கம்

சனிக்கிழமை, 7 மே 2022      தமிழகம்
CM-3 2022 05 07

Source: provided

சென்னை : சென்னை மாநகர பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று திடீரென பயணம் மேற்கொண்டு, அங்கு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதுகுறித்து சட்டசபையில் விளக்கமளித்து பேசினார்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2021, மே 7ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். நேற்று (மே 7, 2022) தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்து ஓராண்டாகிறது. இதனையொட்டி தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, "தமிழக மக்களுக்காக கடந்த ஓராண்டில் உண்மையாக உழைத்துள்ளேன். அந்த நம்பிக்கையில் இன்று அவையில் பேசுகிறேன். என்னை முதல்வராக்கிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோழமை உறவுகளாக இருக்கும் தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி. அவர்களால் தான் நான் தலை நிமிர்ந்து இருக்கிறேன்.

இன்று (நேற்று) காலை நான் ராதாகிருஷ்ணன் சாலையில் (29 சி) அரசுப் பேருந்தில் ஏறிப் பயணித்தேன். 29 சி பேருந்தில் தான் சிறுவயதில் பள்ளிக்குச் சென்று வந்தேன். அதனால் அந்தப் பயணம் எனக்கு மகிழ்ச்சியளித்தது. பேருந்திலிருந்த மகளிரிடம் ஓராண்டு கால தி.மு.க ஆட்சியைப் பற்றிக் கேட்டேன். ஆட்சி நடக்கும் முறை திருப்தியளிக்கிறது என்று மகளிர் தெரிவித்தனர். என்னைப் பார்த்ததில் இன்னும் மகிழ்ச்சியென்றனர். இலவசப் பயணத்தால் லாபமடைவதாகக் கூறினார்கள். இதற்கு சான்றும் உள்ளது. 

இந்தத் திட்டம் குறித்து சென்னையில் மூன்று வழித்தடங்களில் பயணிக்கும் மக்கள் சிலரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இத்திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினப் பெண்கள் பயன் பெற்றுள்ளனர். அதுவும் குறிப்பாக பட்டியலினப் பெண்கள் அதிகமாகப் பயன் பெற்றுள்ளனர். இந்தச் சலுகை மூலமாக மாதந்தோறும் குறைந்தது ரூ.900 வரை மிச்சமாவதாக பெண்கள் பலர் கூறியுள்ளனர். 

இதுதான் இந்த அரசின் சாதனை. அன்றாடச் செலவுக்கு பணம் இல்லாது இருந்த பெண்கள் சேமிக்கக் கூடியவர்களாக மாறியுள்ளனர். ஒரே கையெழுத்து மூலம் கோடிக்கணக்கான மகளிர் வாழ்வில் ஒளியேற்றியது தான் திராவிட மாடல் ஆட்சி. இது மட்டுமல்ல இன்னும் பல சாதனைகளை நமது ஆட்சி செய்துள்ளது. ஓராண்டு காலத்தில் கோடிக்கணக்கான மக்கள் பலன் பெற்றுள்ளனர்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து