Idhayam Matrimony

தற்போது இருப்பவர்கள் ஏன் காலி செய்ய மறுக்கின்றனர்? - ஆர்.ஏ.புரம் குடியிருப்புகளை இடிப்பதற்கு தடை இல்லை : இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 10 மே 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

Source: provided

புதுடெல்லி : தற்போது இருப்பவர்கள் ஏன் காலி செய்ய மறுக்கின்றனர் ? என்று கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சென்னை, ஆர்.ஏ.புரம் குடியிருப்புகளை இடிப்பதற்கு தடை இல்லை என்றும் இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளு இடைக்கால மனுக்கள் அனைத்தையும்  தள்ளுபடி செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை அகற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் நேற்று நடைபெற்றது. அப்போது மனுதாரர்  தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் காலின் கோன்சால்வேஸ் வாதிடும் போது, ‘சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார், அது ஒரு உணர்ச்சிபூர்வமான கொந்தளிப்பை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

முதல்-அமைச்சர் தற்போது மாற்று இடம் வழங்குவதாக கூறியுள்ளார், ஆனால் அந்த இடம் தற்போது வசித்து வரும் பகுதியில் இருந்து வெகுதொலைவில் உள்ளதால், இந்த மக்களின் அன்றாட வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்த மக்களுக்கு உடனடி மாற்று இடமோ, அடிப்படை வசதிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை என வக்கீல் கூறினார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் 2011 முதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதை மாநில அரசு செயல்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் மாநில அரசின் நடவடிக்கைகளை நிறுத்த போவதில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மாற்று இடம் இதுவரை வழங்கப்படவில்லை, இது நியாயம் இல்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது., முதலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான நோட்டீசை பெற்று கொள்ளுங்கள். வேண்டுமெனில் நாங்கள் தற்காலிகமாக மாற்று இடம் வழங்க அறிவுறுத்தல் வழங்குகிறோம். ஆனால் ஆக்கிரமிப்பு விசயங்களில் நீதிமன்ற உத்தரவு கடைபிடிக்கப்பட வேண்டும், அமல்படுத்தப்பட வேண்டும். 

மேலும் தற்போது முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் மாற்று இடம் தொடர்பாக அறிவிப்பை கொடுத்துள்ளார் என கூறுகின்றீர்கள், எனவே அது உறுதிமொழி தானே அவ்வாறு தெரிவித்திருப்பது சாதாரண விசயம் கிடையாது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தடை விதிக்க போவதில்லை. ஏற்கனவே பல குடும்பம் காலி செய்த பின்னரும் தற்போது இருப்பவர்கள் ஏன் காலி செய்ய மறுக்கின்றனர்? முதல்வர் சட்டமன்றத்தில் கூறியதில் இருந்து அவர் இந்த விவகாரத்தில் விழிப்புணர்வுடன் இருக்கிறார் என தெரிகிறது.

 உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நீர்த்துப் போக செய்ய யாருக்கும் அதிகாரம் இல்லை. மாற்று இடத்தில் குடியிருப்புக்கான கடிதங்களை மனுதாரர்கள் முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும். உரிய பாதுகாப்பை பயன்படுத்துங்கள், ஆக்கிரமிப்பை அகற்றுவது தொடர்பாக எங்கள் உத்தரவை அமல்படுத்துங்கள். அதேவேளையில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு இந்த மனுதாரர்களை மாற்றலாம்.

மேலும் அடிப்படை வசதிகளையும் இந்த மக்களுக்கு அரசு செய்து கொடுக்க வேண்டும். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த இடைக்கால மனுக்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கடந்த 2011ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தடுத்து நிறுத்தும் நோக்கிலானது என்றே கருதுகிறோம். எனவே ஆர்.ஏ.புரம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்ற இடைக்கால மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறோம்.

அதேவேளையில் ஏற்கனவே நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்று தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீதான விசாரணை ஜூலை 12-ந்தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம் ஆக்கிரமிப்பு அகற்றம், மாற்று இடம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான நிலை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து