முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரறிவாளன் விடுதலை வழக்கு: தமிழ்நாடு கவர்னருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்? சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதன்கிழமை, 11 மே 2022      இந்தியா
Supreme-Court 2021 07 19

பேரறிவாளன் விடுதலை வழக்கில் தமிழ்நாடு கவர்னருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்? கவர்னரின் மன்னிப்புகள் அரசியலமைப்புக்கு எதிரானதா? என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி எழுப்பியது. பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்ததற்கான ஆவணங்கள் அனைத்தையும் விரிவான அறிக்கையாக மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையென்றால் அரசியல் சாசன சட்ட விதிகளுக்கு உட்பட்டும், சுப்ரீம் கோர்ட் முன்னதாக வழங்கியுள்ள தீர்ப்புகளின் அடிப்படையிலும் நாங்களே இறுதி முடிவை எடுத்து உத்தரவு பிறப்பிப்போம்.

மேலும், ஜனாதிபதியோ அல்லது கவர்னரோ யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டவர்கள்தான்,’ என தெரிவித்து, வழக்கை நேற்றைய தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர். அதன் அடிப்படையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் அமர்வு பேரறிவாளன் வழக்கை விசாரித்து வருகிறது.

பேரறிவாளன் மனு மீது கவர்னர் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் கே.எம். நடராஜ் தெரிவித்தார். பேரறிவாளன் வழக்கில் தமிழ்நாடு கவர்னருக்காக மத்திய அரசு வாதிடுவது ஏன்? என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. கவர்னருக்காக மாநில அரசு வாதிட வேண்டுமே தவிர, மத்திய அரசு வாதிடக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது.

மாநில அரசின் முடிவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருக்கும் போது, கவர்னர் குடியரசு தலைவரிடம் முறையிடலாம் என வழக்கறிஞர் கே.எம். நடராஜ் வாதிட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சுப்ரீம் கோர்ட்; எந்த விதியின் கீழ் குடியரசு தலைவருக்கு கவர்னர் அனுப்பினார் ? கவர்னருக்கு அதிகாரம் இருந்தும் 3 ஆண்டுகளாக ஏன் முடிவெடுக்கவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை; மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என வழக்கறிஞர் கே.எம். நடராஜ் வாதிட்டார். கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று கூற முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கருணை மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது என வழக்கறிஞர் கே.எம். நடராஜ் தெரிவித்தார். பேரறிவாளன் விவகாரத்தில் கருணை மனு மீது மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்றார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு தலையிட்ட பின்னரே குழப்பம் தொடங்கியது என தமிழக அரசு சார்ப்பில் வாதிடப்பட்டது. பொதுவான சட்டப்பிரிவாக இருந்தாலும் எந்த விசாரணை அமைப்பு சம்மந்தப்பட்டுள்ளது என்பதை பொறுத்தே அதிகாரம். தமிழக அரசு தலையிட அதிகாரம் இருக்கிறதா என்பது பிரதான கேள்வியாக இருப்பதாக மத்திய அரசு வாதிட்டது. பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசின் கருத்து மட்டுமே தேவை; ஒப்புதல் தேவையில்லை என தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது.

கவர்னர் மாநில அமைச்சரவையின் முடிவிற்கு முழுமையாக கட்டுப்பட்டவர் என்று தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அமைச்சரவை முடிவை அனுப்பும் போது கவர்னர் அதன் மீது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை செலுத்த முடியாது எனவும் வாதிட்டது.

நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு தெளிவாக பதிலளிக்கவில்லை என தெரிவித்த நீதிபதிகள்; கொலை வழக்கில் மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதா? சுப்ரீம் கோர்ட்த்தின் கேள்விகளும் மத்திய அரசின் வாதங்களும் வேறுவேறாக உள்ளது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

ஐபிசியின் கீழ் விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பான கருணை மனுக்கள் மீது ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என மத்திய அரசு தெரிவித்தது. அப்படியானால் 70 ஆண்டுகளாக கவர்னர் அளித்த தண்டனை குறைப்பு, அரசியல் சட்டத்துக்கு எதிரானதா ? ஆயிரக்கணக்கான உத்தரவுகளை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு எண்ணுகிறதா? என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது.

பேரறிவாளனை விடுவிக்கக் கோரிய வழக்கில் கவர்னரின் முடிவு தொடர்பான ஆவணத்தின் நகலை மத்திய அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. கடந்த முறை 2 முடிவுகளை தேர்வு செய்ய கூறினோம், ஏதேனும் முடிவு செய்யப்பட்டதா ? எனவும் கேள்வி எழுப்பிய நீதிமன்றம் அமைச்சரவையின் முடிவுகளை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதற்கு கட்டுப்பட்டவர் தான் கவர்னர். அமைச்சரவையின் முடிவுகள் தவறு என்றால் அதை கவர்னர், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க முடியுமா ? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

அமைச்சரவையின் அறிவுரை, ஆலோசனையின் படி கவர்னர் நடந்துகொள்ள வேண்டும் என சட்டம் கூறுகிறது என மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார். இருப்பினும், சில நேரங்களில், சில சந்தர்ப்பங்களில் கவர்னர் சுயமாகவும் செயல்பட முடியும் எனவும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக கவர்னர் செயல்பட்டிருப்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது என தமிழக அரசு வாதிட்டது. இந்த விவகாரத்தில் குடியரசு தலைவரை தலையிட வைத்து கூட்டாட்சி அமைப்பை கேள்விக்குள்ளாக்குவதா ? இந்திய தண்டனை சட்டம் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்டது இல்லை. அவற்றில் சில மாற்றங்களை மட்டுமே நாடாளுமன்றம் மேற்கொண்டுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டதாலேயே மாநிலங்கள் மீது மத்திய அரசு அதிகாரம் செலுத்த முடியாது எனவும் தமிழக அரசு வாதிட்டது.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவை ஏற்காமல் மிகப்பெரிய அரசியல் பிழையை கவர்னர் செய்து விட்டார் என தமிழக அரசு வாதத்தை முன்வைத்தது. முடிவெடுக்கும் முன்னுரிமை மத்திய அரசுக்கே எனில் ஒவ்வொரு கொலை வழக்கிலும் கருணை காட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு சென்று விடுமே? மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர் தானே? என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. மூன்று தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தங்களுக்குள் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர்  தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து